மராட்டிய மாநிலத்தின் பர்பானியில் நடந்த ஒரு கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புனேயில் இருந்து பர்பானி நோக்கி தனியார் சொகுசு ஸ்லீப்பர் பஸ்சில் பயணம் செய்த இருவரில், 19 வயதான ரித்திகா தேரே என்பவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
பத்ரி-சேலு சாலையில் பஸ்சு சென்றுகொண்டிருந்தபோது, அவர் ஓடும் பஸ்சிலேயே ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அவரது உடனிருந்தவர் அல்தாப் ஷேக் என்று அறியப்படுகிறது. ஆனால் அதிர்ச்சியாக, அவர்கள் பிறந்த பச்சிளம் குழந்தையை யாருக்கும் தெரியாமல் ஒரு துணியில் மடித்து பஸ்ஸின் ஜன்னல் வழியாக வெளியே வீசி விட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொடூரச் சம்பவத்தை பஸ் ஓட்டுனர் சந்தேகத்துடன் கவனித்துள்ளார். ஜன்னலுக்குள் ஏதோ வீசப்பட்டதை பார்த்ததும், அவர் அல்தாபிடம் கேட்க, “வாந்தி எடுத்தேன்” என பொய்யான பதிலை சொன்னதாக கூறப்படுகிறது. இதேவேளை, சாலையில் நின்று கொண்டிருந்த ஒருவர் பச்சிளம் குழந்தை வீசப்படுவதை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக அவர் பர்பானி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார். பஸ் பயணித்த பாதையில் ரோந்து பணியில் இருந்த போலீசார் அதனை துரத்தி தடுத்து நிறுத்தி பஸ்சிற்குள் சென்று சோதனை நடத்தினர்.
விசாரணையில், குழந்தையை வளர்க்க முடியாது என்பதால் ஜன்னல் வழியாக வீசி விட்டதாக அல்தாப் ஷேக் மற்றும் ரித்திகா தேரே ஒப்புக் கொண்டனர். அவர்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக புனேயில் ஒன்றாக வசித்து வந்தும், தங்களை கணவன் மனைவியாக கூறிக்கொண்டும், அதற்கான எந்த ஆவணத்தையும் சமர்ப்பிக்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
தற்போது குழந்தையை கொன்ற குற்றச்சாட்டில் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நெஞ்சை பிளக்கும் சம்பவம் பர்பானி பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
