ஈராக் நாட்டின் எண்ணெய் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கிர்குக் நகரின் ‘வடக்கு எண்ணெய் திட்ட வாரியத்தின்’ முன்னாள் இயக்குனர் இயாத் ஹுசைன் அல்-ஜவ்ஹர் மற்றும் அதே வாரியத்தின் நிதித் துறையின் முன்னாள் இயக்குனர் லினா ராத் மொஹ்சென் ஆகியோர் அரசு அலுவலகத்தில் ஈராக் தேசியக் கொடிக்கு முன்பாக அநாகரீகமாக இருந்ததாகக் கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் சில மாதங்களுக்கு முன்பே நடந்துள்ளதாகவும், அப்போது அமைச்சகத்தின் உள்விசாரணையைத் தொடர்ந்து அல்-ஜவ்ஹர் தனது பதவியை ராஜினாமா செய்து ஓய்வு பெற்றதாகவும், லினா ராத் மொஹ்சென் வேறு நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
தற்போது இந்த பழைய வீடியோ மீண்டும் சமூக வலைதளங்களில் பரவி பொதுமக்களின் கண்டனத்தைப் பெற்றுள்ளதால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ ஈராக் அரசு விசாரணை தொடங்கியுள்ளது. மேலும், சமூக வலைதளங்களில் தற்போதைய இயக்குனர் ஜெனரல் அலி வார்ட் ஹமௌத்தின் பெயர் தவறாகக் குறிப்பிடப்பட்டதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவத்திற்கும் தற்போதைய தலைமைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று எண்ணெய் திட்ட நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில், இந்த வீடியோ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் போலியாக உருவாக்கப்பட்டது என்று கூறி லினா ராத் மொஹ்சென் சமூக வலைதளப் பக்கங்கள் மீது சட்டப்பூர்வ புகார் அளித்துள்ளார். முன்னாள் இயக்குனர் அல்-ஜவ்ஹரும் தொலைக்காட்சி நேரலையில் தோன்றி, இது ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோ என்று மறுத்துள்ளார்.
இருப்பினும், கடந்த சில மாதங்களுக்கு முன்பே இவர்கள் மீது எடுக்கப்பட்ட உள் துறை நடவடிக்கைகள் மற்றும் இவ்வளவு நீண்ட துல்லியமான வீடியோவை ஏஐ மூலம் உருவாக்குவது கடினம் என்பதைக் குறிப்பிட்டு நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். எண்ணெய் அமைச்சகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஊழல் தடுப்பு நடவடிக்கைகளில் இருந்து பொதுமக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே இந்த பழைய வீடியோ தற்போது திட்டமிட்டு பரப்பப்படுவதாக சில ஈராக் ஊடகங்கள் சந்தேகிக்கின்றன. இந்த வீடியோவின் உண்மைத்தன்மை மற்றும் டிஜிட்டல் முறைகேடுகள் குறித்து ஈராக் அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
