மனிதர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் ‘சிரிப்பு’ குறித்த ஒரு புதிய மற்றும் வியப்பூட்டும் அறிவியல் ஆய்வுத் தகவல் வெளியாகியுள்ளது. மனிதர்களும், சிம்பன்சி, பொனோபோ , கொரில்லா மற்றும் உராங்குட்டான் போன்ற மனிதக் குரங்கினங்களும்  சிரிக்கும்போது, அவற்றின் சிரிப்பு ஒரே மாதிரியான தாளத்தைக்  கொண்டுள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

நெதர்லாந்தில் உள்ள லெயிடான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயிரியல் மற்றும் உளவியல் நிபுணர்கள் இணைந்து மேற்கொண்ட இந்த விரிவான ஆய்வில், மனிதக் குரங்குகள் மற்றும் மனிதக் குழந்தைகளின் சிரிப்பு ஒலிகள் அதிர்வெண், கால அளவு மற்றும் தாள அமைப்பின் அடிப்படையில் மிக நுட்பமாக ஒப்பிடப்பட்டன. இதில், மனிதக் குரங்குகள் எழுப்பும் சிரிப்பொலியின் தாளம், மனிதர்கள் இயல்பாகச் சிரிக்கும் “ஹிஹீ…” என்ற சிரிப்பின் தாள அமைப்போடு அச்சு அசலாகப் பொருந்திப் போவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் மூலம் மனிதர்களின் பேச்சுத் திறனும், சமூகத் தொடர்புகளும் எவ்வாறு உருவாயின என்ற பரிணாம வளர்ச்சியின் ரகசியம் அவிழ்ந்துள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். பொதுவாக, மனிதக் குரங்குகள் விளையாடும்போதும், ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொள்ளும்போதும் மனிதர்களைப் போலவே மூச்சை உள்ளிழுத்தும், வெளியிட்டும் இந்தத் தாள நயமிக்க சிரிப்பொலியை எழுப்புகின்றன.

இது வெறும் ஒலியெழுப்பல் மட்டுமல்லாமல், அவற்றுக்கு இடையே உள்ள சமூகப் பிணைப்பை பலப்படுத்தும் ஒரு முக்கியக் கருவியாகச் செயல்படுகிறது. மனிதர்களுக்கும் மனிதக் குரங்குகளுக்கும் இடையே உள்ள பொதுவான மூதாதையர் வழித்தோன்றல்களின் மூலமே இந்தச் சிரிப்புத் தாளம் பரிணமித்திருக்க வேண்டும் என்றும், பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே இந்தச் சிரிப்பின் தாள வடிவம் விலங்குலகில் தோன்றிவிட்டது என்றும் இந்த ஆய்வின் முடிவுகள் மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றன.