திருச்சி விமான நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “தமிழகத்தில் தூய்மைப் பணியாளர்களைத் தனியார்மயமாக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று விசிக சார்பில் அரசுக்கு விடுத்த கோரிக்கையை ஏற்று, அத்திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்த முதலமைச்சர் விஜய்க்கு எனது பாராட்டுகள். கூட்டணிக் கட்சிகள் முன்வைக்கும் நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் முதலமைச்சரின் இந்த அணுகுமுறை மிகவும் பாராட்டுக்குரியது.

கடந்த கால ஆட்சி நிர்வாகத்தில் நிலவிய நிதி நிலைமை குறித்துப் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் அரசு ‘வெள்ளை அறிக்கை’ வெளியிடுவது ஒரு நல்ல நடைமுறையாகும். தற்போதைய அரசு இதனை வெளிப்படையாக அறிவித்திருப்பது, ஜனநாயகத்தில் வெளிப்படைத்தன்மையுடன் அரசு செயல்படுவதைக் காட்டுகிறது, இதனை வரவேற்கிறேன். மேலும், டெல்லி பிரதிநிதி நியமனம் குறித்து அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார்; அது தவெக கட்சியின் உள்விவகாரம் மற்றும் முதலமைச்சரின் அதிகாரத்திற்குட்பட்ட அரசு பதவி என்பதால் இதில் எந்தப் பாதிப்பும் ஏற்படப்போவதில்லை.

தொடர்ந்து பேசிய அவர், “கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பிருந்தே திமுக கூட்டணியை உடைப்பதற்குப் பல்வேறு தரப்பினரும் தீவிரமாக முயற்சித்தார்கள். குறிப்பாக என்னை முன்னிறுத்தி, என்னை வைத்தே அந்தக் கூட்டணியைப் பிளவுபடுத்தும் முயற்சிகளும் நடைபெற்றன; ஆனால், நான் அதற்கு ஒருபோதும் இணங்கவில்லை. திமுக கூட்டணியைப் பாதுகாக்க வேண்டும் என்ற முழுப் பொறுப்புணர்வுடன் இயங்கிய கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியாகும்.

தேர்தலுக்குப் பின்னர் தற்போதைய அரசியல் சூழலில் இந்தக் கூட்டணியைக் கட்டிக் காப்பாற்ற வேண்டிய பொறுப்போ, அதற்கான தனிப்பட்ட வலிமையோ என்னைப்போன்றவர்களுக்கு இல்லை. எனவே, இது குறித்துப் பதில் கூற வேண்டிய முழுப் பொறுப்பும் கடமையும் திமுக தலைமைக்குத்தான் உள்ளது என்று கூறினார். மேலும், மதிமுக சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவியை ராஜினாமா செய்ய முதலமைச்சர் விஜய் கூறியதாக வைகோ வெளியிட்ட கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அது பற்றி தான் எந்தவொரு கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை எனக் கூறி திருமாவளவன் விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.