தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் நகராட்சி உள்ளது. இங்கு முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இங்கு ஆவணித் திருவிழா, மாசித் திருவிழா, ஐப்பசி மாதம் நடைபெறும் சஷ்டி திருவிழா ஆகியவை பிரசித்தி பெற்ற திருவிழாக்களாகும். இந்நிலையில் வரவிருக்கும் ஐப்பசி மாதம் நடைபெறும் சஷ்டி திருவிழாவிற்கு பல லட்சம் மக்கள் தரிசனத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு சஷ்டி நவம்பர் 2 முதல் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதில் நவம்பர் 7ஆம் தேதி நடக்கும் சூரசம்காரம் நிகழ்ச்சிக்கு பல இடங்களில் இருந்து பக்தர்கள் குவிந்த வண்ணம் இருப்பார்கள். இந்த ஆண்டிற்கான சஷ்டி திருவிழா தரிசன விரைவு கட்டணமாக ரூபாய் 1000 பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த கட்டண வசூலிப்பு தொடர்பாக மக்களின் ஆலோசனையைப் பெற அறிவிப்பு நோட்டீஸ் கோவிலின் வளாகத்தில் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டு இருந்தது. இதில் வருகின்ற 3ஆம் தேதிக்குள் தங்களின் கருத்துக்களை பதிவு செய்யுமாறு குறிப்பிட்டு இருந்தது. ஆனால் இந்த நோட்டீஸில் கோயில் நிர்வாகத்தின் அதிகாரிகள் கையெழுத்து எதுவும் இடம்பெறவில்லை.

இந்நிலையில் இந்த நோட்டீஸ் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி மக்களிடையே கடும் எதிர்ப்பை கிளப்பியது. இந்நிலையில் இந்த நோட்டீஸ் திடீரென எடுக்கப்பட்டுள்ளது. இச்செய்தி குறித்து சுப்பிரமணிய சுவாமி கோவிலின் தக்கார் அருள்முருகன் கூறியதாவது, கோவிலில் தற்போது இருக்கும் கட்டணமில்லாத தரிசனம் மற்றும் 100 ரூபாய் கான விரைவு தரிசனம் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு எந்த விதமான விரைவு கட்டணமும் கோவில் சார்பில் அறிவிக்கப்படவில்லை எனக் கூறியுள்ளார்.