அமெரிக்கா மற்றும் இரான் இடையே தொடர்ந்து வரும் மோதல் காரணமாக, வர்த்தகக் கப்பல்கள் செல்லும் முக்கியமான ‘ஹார்முஸ் ஜலசந்தி’ மூடப்பட்டுள்ளது. இதனால் உலகளவில் பெரும் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, மத்திய கிழக்கில் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எல்.பி.ஜி கேஸ் வருவதும் தடைபட்டுள்ளது.
கச்சா எண்ணெய்க்காக மற்ற நாடுகளை நம்பியிருக்கும் இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. ஜலசந்தி மூடப்பட்டதால் பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில், பாகிஸ்தானுக்கு ஒரு பெரும் அதிர்ஷ்டமாக அங்குள்ள சிந்து மாகாணத்தின் சங்கர் மாவட்டத்தில் மாபெரும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணெய் வளத்தை பாகிஸ்தானின் பொதுத்துறை நிறுவனமான கண்டுபிடித்துள்ளதுடன், இந்த இடத்திற்கு ‘போபி டீப்-1’ என்றும் பெயரிட்டுள்ளது. ராஜஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள இந்த வறண்ட பகுதியில் இருந்து, தற்போது பாகிஸ்தான் தினசரி 2,000 பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தியைத் தொடங்கியுள்ளது.
இங்கு எண்ணெயுடன் சேர்த்து பெரிய அளவில் எரிவாயுவும் கிடைத்துள்ளதால், பாகிஸ்தானின் எரிசக்தி கவலைகள் தற்போது ஓரளவுக்குக் குறைந்துள்ளன. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் ஏற்பட்டுள்ள கடுமையான எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க, புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த எண்ணெய் வளம் தங்களுக்குப் பெரும் பக்கபலமாக இருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
