தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், மாவட்டம் தோறும் மக்கள் சந்திப்பு என்ற பெயரில் பொதுக்கூட்டங்களை நடத்தி, பொதுமக்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, வியாழக்கிழமை ஈரோடு மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
இந்த பொதுக்கூட்டம் நடைபெற உள்ள இடம், விஜயபுரி அம்மன் கோவிலுக்குச் சொந்தமான இடமாகும். 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கூட்டத்துக்கு காவல் துறை சார்பில் 84 நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இதற்கான விளக்கங்கள் மற்றும் தேவையான ஆவணங்களை தமிழக வெற்றிக் கழகம் தரப்பினர் சமர்ப்பித்தனர்.
இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில், கூட்டம் நடைபெறும் இடத்துக்கான அனுமதி கோவில் நிர்வாகத்திடம் இருந்து பெறப்படவில்லை என கோவில் செயல் அலுவலர் காவல் துறைக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் கடிதம் அனுப்பினார். இதையடுத்து, கோவில் நிர்வாகத்திடம் இருந்து தடையில்லா சான்று (NOC) பெற்றுத் தருமாறு காவல் துறை அறிவுறுத்தியது.
அதன்படி, கோவில் நிர்வாகம் சார்பில் 5 நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அவற்றை தமிழக வெற்றிக் கழகம் ஏற்றுக் கொண்டதையடுத்து, பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே வியாழக்கிழமை விஜய்யின் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இதனையொட்டி, செய்தியாளர்களிடம் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி செங்கோட்டையன் பேசியதாவது: தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த பிறகு எனக்கு புதிய வெளிச்சம் கிடைத்துள்ளது. ஒரு சகோதரனாக விஜய் என்னை அரவணைத்துக் கொண்டார். அவரை தமிழகத்தின் முதல்வராக ஆக்குவதற்காக கடுமையாக உழைப்போம். ஈரோட்டில் நடைபெறும் விஜய் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் மக்கள், காவல் துறை விதிகளைப் பின்பற்றி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
கூட்டம் நடைபெறும் இடத்தில் குடிநீர் வசதி, அவசர ஊர்திகள், கழிவறைகள், தீயணைப்பு வாகனம், பாதுகாப்பு அரண் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. பெரிய விளம்பர பதாகைகள் மற்றும் கட்-அவுட்கள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் தொண்டர்கள் ஏறாமல் இருப்பதற்காக முள் கம்பிகள் அமைக்கப்படும். மேலும் சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்து, அங்கிருந்து கார் மூலம் விஜய் கூட்டம் நடைபெறும் இடத்துக்கு வருகிறார்” என்றார்.
