மஹாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டம் பரத்வாடாவில் இளம்பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்து, ஆபாச வீடியோக்களைப் பரப்பிய வழக்கில் கைதான முக்கியக் குற்றவாளிக்கு, போலீஸார் முன்னிலையில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்தப்பட்ட வீடியோ வெளியாகி மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அயன் அகமது என்பவன், ‘பாஸ்’ (Boss) என்று எழுதப்பட்ட டி-சர்ட் அணிந்து, பட்டாசுகள் வெடித்து, கேக் வெட்டித் தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளான். அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், இந்த பார்ட்டியில் சில காவலர்களும் கலந்துகொண்டு அவனுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். கொடூரக் குற்றத்தில் ஈடுபட்ட ஒருவனுக்கு போலீஸார் ராஜ மரியாதை கொடுத்தது பொதுமக்களிடையே கடும் ஆத்திரத்தை உண்டாக்கியுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by SaamTvNews (@saamtvnews)

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அமராவதி காவல் கண்காணிப்பாளர் (SP) அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். வீடியோவில் அடையாளம் காணப்பட்ட 6 காவலர்களை உடனடியாக அமராவதி கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், அவர்கள் மீது துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது அயன் அகமதுவின் தந்தை பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். அங்கிருக்கும் விலை உயர்ந்த கார்களைப் பயன்படுத்தி போட்டோ மற்றும் வீடியோக்களை எடுத்து, சமூக வலைதளங்கள் வாயிலாக இளம்பெண்களை அயன் கவர்ந்துள்ளான். கடந்த 6 மாதங்களில் பல சிறுமிகளைத் தனது வலையில் வீழ்த்தி ஆபாச வீடியோக்களை எடுத்துள்ளான். அவனது நண்பன் உஜேர் என்பவருடன் ஏற்பட்ட மோதலால் இந்த வீடியோக்கள் இணையத்தில் கசிந்துள்ளன.

குற்றவாளியின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் லேப்டாப், ஹார்ட் டிஸ்க் மற்றும் டேப்லெட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றில் இதுவரை 8 இளம்பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதும், 18 ஆபாச வீடியோக்கள் மற்றும் 39 புகைப்படங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய போலீஸாரே குற்றவாளியுடன் கைகோர்த்துள்ள இந்தச் சம்பவம், மகாராஷ்டிராவில் பெரும் அரசியல் மற்றும் சமூக அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.