நாசிக் டிசிஎஸ் (TCS) நிறுவனத்தின் பிபிஓ பிரிவில் மதம் மாற வற்புறுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, தலைமறைவாக இருப்பதாகத் தேடப்படும் நிதா கான் (26), தற்போது மும்பையில் தனது கணவருடன் இருப்பதாகவும், அவர் முதல் முறையாகக் கர்ப்பமடைந்துள்ளதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சமூக வலைதளங்கள் மற்றும் சில செய்தி ஊடகங்களில் நிதா கான் அந்த நிறுவனத்தின் ‘மனிதவள மேலாளர்’ (HR Head) என்று கூறப்படுவது முற்றிலும் தவறு என அவரது சகோதரர் தெரிவித்துள்ளார். நிதா கான் ஒரு சாதாரண ‘டெலி-காலர்’ (Tele-caller) மட்டுமே. அவரது இன்ஸ்டாகிராம் புகைப்படத்தைத் திருடி, அதில் ‘HR Head’ என்ற பதவியைப் போலியாகச் சேர்த்து வைரலாக்கியுள்ளதாகக் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

நிதா கானின் தந்தை இது குறித்துக் கூறுகையில், “பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்ததற்காகப் பெருமைப்பட்டேன். ஆனால் என் மகளுக்கு இப்படி ஒரு நிலை ஏற்படும் என்று தெரிந்திருந்தால் அவரை வேலைக்கே அனுப்பியிருக்க மாட்டேன். அவர் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. தினமும் வேலைக்குச் சென்று வந்த ஒரு சாதாரணப் பெண்ணைப் பற்றி இவ்வளவு கொடூரமான பொய்கள் பரப்பப்படுவது எங்களை மனவேதனையில் ஆழ்த்தியுள்ளது,” எனத் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு திருமணமான நிதா கான், ஜனவரி மாதம் முதல் மும்பையில் உள்ள மலாடு கிளைக்கு மாற்றலாகிச் சென்றுவிட்டார். “அவர் யாரிடமிருந்தும் ஓடிப் போகவில்லை. இதுவரை ஒரு போலீஸ் அதிகாரி கூட எங்கள் வீட்டிற்கு வந்து அவரைப் பற்றி விசாரிக்கவில்லை என அவரது மாமா தெரிவித்துள்ளார். தற்போது அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தை அணுக அவரது வழக்கறிஞர் திட்டமிட்டுள்ளார்.

நாசிக் டிசிஎஸ் அலுவலகத்தில் பணியாற்றிய 23 வயது பெண் ஒருவர் அளித்த புகாரில், தனிஷ் ஷேக் என்பவர் தன்னைத் திருமண ஆசை காட்டி ஏமாற்றியதாகவும், இஸ்லாம் மதத்தைப் பற்றி நிதா கான் மற்றும் தவுசிப் ஆகியோர் தவறாகப் பேசியதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதன் அடிப்படையில் ஒன்பது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் நிதா கான் மீது மதம் தொடர்பான ஒரு வழக்கில் மட்டுமே பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட 7 பேரில், இருவர் மீண்டும் புதிய பாலியல் புகார் வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.