மத்தியப் பிரதேச மாநிலம் ததியாவில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்ச்சி ஒன்றில், ஆசி பெற வந்த பாஜக எம்.எல்.ஏ-வை சாமியார் ஒருவர் குத்தி, தள்ளிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ததியா மாவட்டத்தின் பெர்ச்சா கிராமத்தில் அண்மையில் பாகவதக் கதை சொல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரபல ஆன்மீகவாதி சீதாராம் பாபா சொற்பொழிவாற்றி வந்தார். அப்போது சேவடா தொகுதி பாஜக எம்.எல்.ஏ பிரதீப் அகர்வால், மேடைக்குச் சென்று பாபாவிற்கு மாலை அணிவித்து ஆசி பெற முயன்றார்.

அப்போது திடீரென ஆத்திரமடைந்த சீதாராம் பாபா, எம்.எல்.ஏ-வை சரமாரியாகத் திட்டியதோடு, அவரது முதுகில் குத்துவிட்டு பலமாகப் பின்னுக்குத் தள்ளிவிட்டார். மேலும், எம்.எல்.ஏ அணிவித்த மாலையை கழற்றி அவர் முகத்திலேயே வீசி எறிந்தார். பொதுவாக மக்கள் பிரதிநிதிகள் இது போன்ற செயல்களுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். ஆனால், எம்.எல்.ஏ பிரதீப் அகர்வால் சற்றும் முகம் சுளிக்காமல், ஒரு கீழ்ப்படிதலுள்ள சீடனைப் போல பாபாவின் காலடியில் மண்டியிட்டு கைகூப்பி மன்னிப்பு கோரினார். பாபாவின் இந்த ‘அடி’யை அவர் ஆசிர்வாதமாகவே ஏற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

 

மத்தியப் பிரதேசத்தின் பிண்ட் மாவட்டத்தைச் சேர்ந்த நிஸ்ரோல் கோயில் மகந்தான சீதாராம் பாபா, அப்பகுதியில் மிகவும் செல்வாக்கு மிக்கவர். அவரது குருவான ‘மஸ்த்ராம் பாபா’ வழியைப் பின்பற்றுபவர் எனக் கூறப்படும் இவர், தனது முரட்டுத்தனமான ஆசிர்வாதத்திற்குப் பெயர் பெற்றவர். சீதாராம் பாபாவின் பாணி குறித்து அவரது ஆதரவாளர்கள் கூறுகையில், பாபா யாரை மிகவும் நெருக்கமானவராகக் கருதுகிறாரோ, அவர்களைத்தான் இப்படி அடிப்பார். இது கோபம் அல்ல, இது ஒரு வகையான ‘சிறப்பு ஆசிர்வாதம்’ என்கிறார்கள்.

மேலும் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் எனப் பலரும் இவரது ‘அடி’யைப் பெற வரிசையில் நிற்பார்கள். இந்த வீடியோ 4-5 நாட்கள் பழமையானது என்றாலும், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு மக்கள் பிரதிநிதியை பொது மேடையில் சாமியார் ஒருவர் அவமதிப்பதா என ஒரு தரப்பினரும், இது குரு-சீடர் இடையே உள்ள ஆன்மீகப் பிணைப்பு என மற்றொரு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுவரை இது தொடர்பாக எம்.எல்.ஏ தரப்பில் எந்தப் புகாரும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.