தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாகப் புகைச்சல் ஆரம்பமாகியுள்ளது. டெல்லியில் நேற்று மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் மேலிடக் கூட்டத்தில், திமுக மீது கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டணி பேச்சுவார்த்தைக்காகத் தாங்கள் குழு அமைத்து 70 நாட்களாகியும், திமுக இன்னும் குழு அமைக்காமல் தாமதப்படுத்துவது காங்கிரஸ் தொண்டர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளதாகத் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிறிஷ் சோடங்கர் மற்றும் செல்வப்பெருந்தகை ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் திமுகவிடம் முன்வைக்க வேண்டிய கோரிக்கைகள் குறித்து அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த தேர்தலில் 25 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ், இந்த முறை 17 தொகுதிகளைக் கூடுதலாகச் சேர்த்து மொத்தம் 42 தொகுதிகளைக் கேட்க முடிவு செய்துள்ளது.

அதுமட்டுமின்றி, தேர்தலில் வெற்றி பெற்றால் “ஆட்சியில் பங்கு – அதிகாரத்தில் பங்கு” என்ற கோரிக்கையையும், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் 20 சதவீத இட ஒதுக்கீட்டையும் வலியுறுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

வழக்கமாக திமுகவிற்கு ஆதரவாகப் பேசி வந்த செல்வப்பெருந்தகை, தற்போது அழுத்தமாகப் பேசி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முக்கிய முடிவுகளை அவர் நாளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்துத் தெரிவிக்கவுள்ளார்.

காங்கிரஸின் இந்தத் திடீர் நிபந்தனைகளையும் தொகுதிக் கணக்குகளையும் திமுக தலைமை எப்படிச் சமாளிக்கப் போகிறது என்பது தான் தற்போதைய பெரிய கேள்வியாக உள்ளது.