மத்தியப் பிரதேச மாநிலம் ஷாபுரா அருகே, மனைவியின் மன உளைச்சல் காரணமாக புதுமாப்பிள்ளை ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன்னதாக அவர் வெளியிட்ட வீடியோவின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஷாபுரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வசந்த் குஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் விகாஸ் ஹிர்வே (24). இவருக்கும் சினேகா சோலங்கி என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை கணவன் – மனைவி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த விகாஸ், வீட்டை விட்டு வெளியேறி அருகில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்துத் தங்கியுள்ளார். அங்கு அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக விகாஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, எனது தற்கொலைக்கு மனைவி சினேகா தான் முழு காரணம். கடந்த 7 மாதங்களாக அவர் என்னை மனரீதியாகத் துன்புறுத்தி வருகிறார். தனது ஆவணங்கள் மற்றும் உடமைகள் அனைத்தையும் ஏற்கனவே தனது தாய் வீட்டிற்கு மாற்றிவிட்டார். நான் அவரைத் துன்புறுத்துவதாகப் பொய்யான புகார்களைக் கூறி வருகிறார். எனது குடும்பத்தினர் அவரிடம் அன்பாக இருந்தபோதும், அவர்களைப் பற்றி என்னிடம் தவறாகப் பேசி வந்தார். கடந்த ஒரு மாதமாக அவரது பாட்டியின் தூண்டுதலால் சினேகாவின் நடத்தையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த விகாஸின் குடும்பத்தினர் ஹோட்டலுக்குச் சென்றபோது, அவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். உடனே ஷாபுரா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்துப் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விகாஸ் வெளியிட்ட வீடியோ மற்றும் குடும்பத்தினரின் வாக்குமூலங்களை ஆய்வு செய்து வருகின்றனர். விசாரணையின் அடிப்படையில் சினேகா மற்றும் அவரது பாட்டி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போலீசார் தெரிவித்தனர்.
