மும்பையில் உணவு நச்சுத்தன்மை (Food Poisoning) காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களில் தம்பதியினர் மற்றும் அவர்களது இரு மகள்களும் அடங்குவர். இது பற்றி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவலின்படி, உயிரிழந்தவர்கள் அப்துல்லா டோகாடியா (40), அவரது மனைவி நஸ்ரின் டோகாடியா (35) மற்றும் மகள்கள் ஆயிஷா (16), ஜைனப் (13) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சம்பவத்தன்று இரவு, இந்த குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பிரியாணி சாப்பிட்டுள்ளனர். அதன் பிறகு சிறிது நேரம் கழித்து தர்பூசணி பழத்தைச் சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. உணவு சாப்பிட்டு முடித்த சில மணி நேரங்களிலேயே, நான்கு பேருக்கும் கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

வாந்தி மற்றும் மயக்கத்தால் பாதிக்கப்பட்ட அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி குடும்பத்தினர் ஒவ்வொருவராக அடுத்தடுத்து உயிரிழந்தனர். உயிரிழப்பதற்கு முன்னதாக, குடும்ப உறுப்பினர் ஒருவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இரவு உணவாக பிரியாணியும், பின் தர்பூசணியும் உட்கொண்டதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து மும்பை காவல்துறை உயரதிகாரி கூறுகையில், “இந்த விவகாரம் மிகவும் தீவிரமானது. உணவில் ஏதேனும் விஷத்தன்மை இருந்ததா அல்லது பிரியாணி மற்றும் தர்பூசணி ஆகிய இரண்டு வெவ்வேறு உணவுப் பொருட்களைச் சேர்த்து உண்டதால் ஏற்பட்ட எதிர்வினையா என்பது குறித்துத் தீவிரமாக விசாரித்து வருகிறோம் என்றார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் தற்போது விபத்து மரணம் (ADR) என வழக்குப் பதிவு செய்துள்ளனர். உயிரிழப்புக்கான உண்மையான காரணம் உணவு நச்சுத்தன்மையா அல்லது வேறு ஏதேனும் சதி உள்ளதா என்பது பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.மேலும்  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.