இந்தியாவைப் பற்றி சமூக வலைதளங்களில் பெரும்பாலும் எதிர்மறையான கருத்துகளே பகிரப்பட்டு வரும் நிலையில், பெங்களூரு நகரின் நவீனத்தையும், வளர்ச்சியையும் வியந்து பாராட்டியுள்ளார் வெளிநாட்டுப் பயணி ஒருவர். பெங்களூரு நகரம் தனக்கு ஒரு ‘ஃபியூச்சர் சிட்டி’ போலத் தெரிவதாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜாக் ஹீட்டன் (Jack Heaton) என்ற வெளிநாட்டுப் பயணி, இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தனது பயண அனுபவங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வரும் அவர், சமீபத்தில் பெங்களூருவில் இரண்டு வாரங்கள் தங்கியிருந்தார். அந்த அனுபவம் குறித்து அவர் கூறுகையில், “இந்தியாவின் சிறந்த இடத்தைத் தேடி நான் மேற்கொண்ட பயணத்தில், கர்நாடகா இப்போது எனது பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சொல்லப்போனால், தமிழகத்தை விடவும் கர்நாடகா எனக்கு மிகவும் பிடித்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
பெங்களூருவின் நவீன வாழ்க்கை முறை, உயர்தர உணவகங்கள், பசுமை மற்றும் ஸ்டார்ட்-அப் கலாச்சாரம் ஆகியவற்றை ஜாக் வெகுவாகப் பாராட்டியுள்ளார். சமூக வலைதளங்களில் காட்டப்படும் இந்தியா என்பது முழுமையான உண்மை அல்ல. பெங்களூருவின் சூழல் முற்றிலும் மாறுபட்டது. இங்குள்ள இளைஞர்கள் கடின உழைப்பாளிகளாகவும், நட்புணர்வு மிக்கவர்களாகவும் உள்ளனர். இந்த நகரம் எதிர்காலத்திற்குத் தயாரான ஒரு நவீன நகரமாக எனக்குத் தோன்றுகிறது” என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
பெங்களூருவின் போக்குவரத்து நெரிசல் ஒரு பெரிய சவாலாக இருந்தாலும், அந்த நகரம் வாழ்வதற்கு மிகவும் ஏற்ற இடமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். அங்குள்ள மக்களுடன் இணைந்து ஹோலி போன்ற பண்டிகைகளைக் கொண்டாடியது தனக்கு மறக்க முடியாத அனுபவம் என்றும், உள்ளூர் கலாச்சாரத்தைப் புரிந்து கொள்ள அது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இந்திய இணையவாசிகள் பலரும் ஜாக்கிற்குத் தங்களது நன்றிகளைத் தெரிவித்து வருகின்றனர். “இறுதியாக ஒருவர் இந்தியாவின் நேர்மறையான பக்கத்தைக் காட்டியுள்ளார்” என்றும், “பெங்களூரு உண்மையிலேயே இந்தியாவின் நவீன முகம்” என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
