பல்கேரியாவின் கருங்கடல் கடற்கரை ஓரத்தில் கண்டெடுக்கப்பட்ட 6,500 ஆண்டுகள் பழமையான ‘வர்ணா நெக்ரோபோலிஸ்’ கல்லறைகள், மனிதகுல வரலாற்றில் தங்கம் எவ்வாறு செல்வத்தின் அடையாளமாக மாறியது என்பதைக் குறித்து வியக்கத்தக்கத் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளன.
கடந்த 1972-ஆம் ஆண்டு, பல்கேரியாவின் வர்ணா நகரில் தொழிற்சாலை ஒன்றிற்காகக் குழி தோண்டிய தொழிலாளர்கள், தற்செயலாகப் பழங்காலக் கல்லறைகளைக் கண்டெடுத்தனர். ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், இவை சுமார் 6,500 முதல் 7,000 ஆண்டுகள் பழமையானவை என்பதும், மனிதர்களால் செதுக்கப்பட்ட உலகின் மிகப்பழமையான தங்க ஆபரணங்கள் இவை என்பதும் உறுதி செய்யப்பட்டது.
மொத்தம் கண்டெடுக்கப்பட்ட 294 கல்லறைகளில், 43-வது எண் கொண்ட கல்லறை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அதில் ஒரு ஆணின் எலும்புக்கூட்டுடன் சுமார் 1.5 கிலோ எடை கொண்ட தங்க நகைகள், வளையல்கள் மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட கோடரி ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. ஆய்வில் கிடைத்த மொத்தத் தங்கத்தில் பெரும்பகுதி வெறும் 4 கல்லறைகளில் மட்டுமே குவிந்திருந்தது, அந்த காலத்திலேயே சமூகத்தில் மிகப்பெரிய பொருளாதார ஏற்றத்தாழ்வு இருந்ததை இது காட்டுகிறது.
போரோ அல்லது வெளிநாட்டு ஆக்கிரமிப்போ இல்லாமல், இந்த வசதி படைத்த நாகரிகம் சுமார் 6,000 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென மறைந்து போனது. கல்லறைகளில் இருந்த உடல்களில் எவ்வித காயங்களும் இல்லாததால், அவர்கள் போரினால் அழியவில்லை என்பது உறுதியானது. கருங்கடலின் நீர்மட்டம் திடீரென உயர்ந்ததால், கடற்கரை ஓர குடியிருப்புகள் மூழ்கியிருக்கலாம் அல்லது நிலங்கள் சதுப்பு நிலங்களாக மாறியதால் மக்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
நிதியின்மை மற்றும் உள்ளூர் பிரச்சனைகளால் 1991-ஆம் ஆண்டு முதல் இங்கு அகழ்வாராய்ச்சிப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தப் புதையல் நிலத்தின் இன்னும் மூன்றில் ஒரு பங்கு பகுதி தோண்டப்படாமல் உள்ளது. தற்போது அந்த இடங்களில் தொழிற்சாலைகளும், குப்பைக் கிடங்குகளும் உருவெடுத்துள்ளது வரலாற்று ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது இங்கு கண்டெடுக்கப்பட்ட தங்கங்கள் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு, கணினி மூலம் ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றன.
