கடந்த ஓராண்டில் இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்படவிருந்த போர் உள்ளிட்ட உலகளாவிய 8 போர்களைத் தான் தடுத்து நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஒருமுறை உரிமை கோரியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“கடந்த ஓராண்டில் மட்டும் கம்போடியா – தாய்லாந்து, கொசோவோ – செர்பியா, இந்தியா – பாகிஸ்தான், இஸ்ரேல் – ஈரான், அர்மேனியா – அசர்பைஜான் என மொத்தம் 8 போர்களை நான் தடுத்து நிறுத்தி உள்ளேன். உலகின் மிக சக்திவாய்ந்த நாடு அமெரிக்கா தான் என்பதை இது நிரூபிக்கிறது.”
இதே கருத்தை வாஷிங்டனில் நடைபெற்ற தேசிய பிரார்த்தனை காலை விருந்து நிகழ்ச்சியிலும் அவர் வலியுறுத்தினார். கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 90-க்கும் மேற்பட்ட முறை இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போரைத் தான் தடுத்ததாக டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.
இருப்பினும், இந்தியா – பாகிஸ்தான் விவகாரத்தில் மூன்றாம் தரப்பு தலையீடு எதையும் இந்தியா எப்போதும் ஏற்றுக்கொண்டதில்லை. எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து பாகிஸ்தானுடன் நேரடிப் பேச்சுவார்த்தை மட்டுமே நடத்தப்படும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. டிரம்பின் இந்தக் கூற்றை மத்திய அரசு தொடர்ந்து திட்டவட்டமாக மறுத்து வருகிறது.
டிரம்பின் இந்தப் பேச்சு குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் மத்திய அரசைச் சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (X) தளத்தில், “வாஷிங்டனில் உள்ள நல்ல நண்பர் (டிரம்ப்), இந்தியா – பாகிஸ்தான் போரைத் தான் 100-வது முறையாகத் தடுத்ததாகக் கூறி வருகிறார். ஆனால் பிரதமர் மோடி இது குறித்து தொடர்ந்து மௌனம் காத்து வருவது ஏன்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
