அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பொருளாதார உறவுகளில் ஒரு முக்கிய மைல்கல்லாக, ‘புராஜெக்ட் வால்ட்’என்ற புதிய திட்டத்தின் கீழ் பாகிஸ்தானின் சுரங்கத் துறையில் 1.3 பில்லியன் டாலர் சுமார் 11,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய தங்கம் மற்றும் செம்புச் சுரங்கங்களில் ஒன்றான ரெக்கோ டிக் திட்டத்தில் அமெரிக்காவின் எக்சிம் வங்கி இந்த நிதியை முதலீடு செய்கிறது. சர்வதேச அளவில் அத்தியாவசிய கனிமங்களின் விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தவும், குறிப்பாக இந்தத் துறையில் சீனாவின் ஆதிக்கத்தைக் குறைக்கவும் அமெரிக்கா இந்த மூலோபாய நடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்த முதலீடு வெறும் சுரங்கத் தொழிலுடன் மட்டும் நின்றுவிடாமல், பலுசிஸ்தான் பிராந்தியத்தின் சாலைக் கட்டமைப்பு, எரிசக்தி வசதிகள் மற்றும் உள்ளூர் மக்களின் சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் தற்போது சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடிக்கு இந்த அந்நிய முதலீடு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும் என அந்நாட்டு அரசு கருதுகிறது.

எனினும், பலுசிஸ்தான் மாகாணத்தில் நிலவி வரும் பாதுகாப்பு சவால்கள் மற்றும் பிரிவினைவாதக் குழுக்களின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், இந்த பிரம்மாண்ட திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்துவது அமெரிக்காவிற்கும் பாகிஸ்தானிற்கும் ஒரு பெரிய சவாலாகவே இருக்கும் என அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.