சென்னை கே.கே.நகர் அருகே நெசப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண், சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், அசோக்நகர் பகுதியில் கார்பெண்டராக வேலை பார்த்து வரும் இளைஞரை கடந்த 6 ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
ஆனால், 2 வாரங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறின் காரணமாக, அந்த இளைஞர் காதலியுடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதையடுத்து, செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றும், பேச மறுத்ததால், இளம்பெண் காதலன் மீது கடும் கோபம் கொண்டிருந்தார்.
சென்னை: கே.கே நகர் சாலையில் 2 இளம்பெண்கள் இணைந்து இளைஞர் ஒருவரை குச்சி மற்றும் கைகளால் சரமாரியாக தாக்கியுள்ளனர். காவல்துறையினர் விசாரித்ததில், நெசப்பாக்கத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணின் முன்னாள் காதலர் அந்த இளைஞர் என்பது தெரியவந்துள்ளது. 6 ஆண்டு காதல் கருத்து வேறுபாட்டால்… pic.twitter.com/MQQ76o0KjD
— PttvOnlinenews (@PttvNewsX) August 8, 2025
இந்தநிலையில், கே.கே.நகர் ஏ.பி.பட்ரோடு சாலையில், தனது தாயுடன் நடந்து சென்ற அந்த இளைஞரை, இளம்பெண் தனது தங்கையுடன் சேர்ந்து வழிமறித்தார். இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென, இளம்பெண் சிறிய கம்பால் தனது காதலனைத் தாக்கினார்.
அதிர்ச்சியடைந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றாலும், அவர் தங்கையுடன் சேர்ந்து தொடர்ந்து விரட்டி தாக்கியதாக கூறப்படுபடுகிறது. இதில், இளைஞருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, அவர் கே.கே.நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
நடுரோட்டில் காதலி காதலனை தாக்கும் இந்த காட்சி, அங்கு வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்தது. சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து கே.கே.நகர் போலீசார், காதலர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
