தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே மங்களக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த முத்துராமலிங்கம், டெய்லராக வேலை செய்து வந்தவர். அவரின் மனைவி விஜயாவுக்கு சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு ஏரல் ராஜபதி அருகே உள்ள சொக்கப்பழங்கரை கிராமத்தை சேர்ந்த பூசாரி ரவியுடன் பழக்கம் ஏற்பட்டது.
அடிக்கடி கோவிலுக்கு சென்றபோது ஏற்பட்ட இந்த நட்பு பின்னர் நெருக்கமான உறவாக மாறியதாக கூறப்படுகிறது. இதைப் பற்றி தெரிந்த கணவர் முத்துராமலிங்கத்துக்கும் மனைவி விஜயாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால், விஜயா கணவரை விட்டு குழந்தைகளுடன் ரவியுடன் வசிக்கத் தொடங்கினார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இருவரும் சண்முகபுரம் பகுதியில் குடியேறினர்.
நேற்று இரவு, பூசாரி ரவி வேலை முடித்து வீடு திரும்பும் வழியில் சோட்டையன் தோப்பு சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே, விஜயாவின் மகள்களுக்கு சிக்கன்-65 வாங்கி கொண்டிருந்தார்.
அப்போது பைக்கில் வந்த சிலரும், நடந்து வந்த சிலரும் சேர்ந்து மறைத்து வைத்திருந்த அரிவாள்களால் அவரை சரமாரியாக வெட்டினர். கடும் ரத்தக்வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அவ்விடத்தை விட்டு கொலையாளிகள் தப்பி ஓடினர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தாளமுத்து நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ரவியின் உடலை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். தப்பியோடிய குற்றவாளிகளை பிடிக்க சிறப்பு போலீஸ் குழுக்கள் தீவிரமாக தேடிவருகின்றன. இந்த கொலை சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
