உலகின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக கருதப்படும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலுவது உலகம் முழுவதிலுமுள்ள மாணவர்களின் கனவாக இருந்து வருகிறது. ஆனால், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களுக்கே அங்கு சேர்க்கை கிடைப்பதால், அந்த வாய்ப்பை எவரும் எளிதில் இழக்க விரும்புவதில்லை.

இந்த நிலையில், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சேர்க்கை கிடைத்த தகவலை ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அறிந்து அதிர்ச்சியடைந்த ஒரு இசைக்கலைஞரின் சம்பவம் சமூக ஊடகங்களில் கவனம் பெற்றுள்ளது.

அந்த இசைக்கலைஞர், உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சேர விண்ணப்பித்ததாக தெரிவித்துள்ளார். அப்போது தன்னை காத்திருப்போர் பட்டியலில் (waiting list) சேர்த்ததாகவும், பின்னர் எந்த பதிலும் வரவில்லை என நினைத்து அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கருதி, வேறு பாதையைத் தேர்வு செய்ததாகவும் கூறியுள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Hyosang / Luxid (@hyosanggg)

பல்கலைக்கழகத்திலிருந்து பதில் வராததால், இசை மீது கவனம் செலுத்தத் தொடங்கி, தற்போது ஒரு தொழில்முறை இசைக்கலைஞராக செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சமீபத்தில் தனது பழைய மின்னஞ்சல் பெட்டியை சுத்தம் செய்தபோது, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஹார்வர்டு பல்கலைக்கழகத்திலிருந்து அனுப்பப்பட்ட சேர்க்கை உறுதிப்படுத்தல் மின்னஞ்சல் ஒன்றை அவர் கண்டுபிடித்துள்ளார். அந்த மின்னஞ்சலை அப்போது திறக்காததால், ஹார்வர்டில் படிக்கும் அரிய வாய்ப்பை இழந்தது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வீடியோவில், “முதலில் கோபம் வந்தது, பின்னர் மிகுந்த சோகமாக இருந்தேன். அதற்குப் பிறகு ஒரு விதமான பெருமையும் ஏற்பட்டது. இப்போது இதை நினைத்தால் ஆச்சரியமாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது. இந்த மின்னஞ்சலை இப்போது திறந்தாலும் என் வாழ்க்கையில் எதுவும் மாறப்போவதில்லை. ஆனால், இந்த அனுபவத்தை வெளிப்படையாகப் பகிர விரும்பினேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் நிலையில், பலர் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். சிலர் பல்கலைக்கழகம் நேரடியாக கடிதம் அனுப்பியிருக்க வேண்டுமென விமர்சித்துள்ளனர். மற்றொரு தரப்பினர், மீண்டும் ஹார்வர்டில் விண்ணப்பிக்கலாம் என்றும், அங்கு நடைபெறும் ஆன்லைன் பாடநெறிகளை பயன்படுத்தலாம் என்றும் ஊக்குவித்து வருகின்றனர். இந்த சம்பவம், கல்வி வாய்ப்புகள் தொடர்பான தகவல்களை தொடர்ந்து கவனிக்க வேண்டிய அவசியத்தை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.