சீனாவின் ஹாங்சோ நகரில், தனது மனைவியை ஏமாற்றியதாகக் கூறப்படும் ஒரு நபர், ஹோட்டல் ஜன்னல் வழியாக தப்பிக்க முயன்ற போது, உள்ளாடைகளை மட்டுமே அணிந்த நிலையில் ஹோட்டல் அறிவிப்புப் பலகையில் தொங்கிய சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அவர் தன்னுடைய மனைவியை ஏமாற்றி வேறொருவருடன் இருந்ததாகவும் அப்போது மனைவி வந்ததால் இப்படி பயந்து போய் அரைகுறை உடையில் தொங்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் சீனாவின் ஹாங்சோ நகரில் உள்ள ‘போயு’ (Boyu) என்ற ஹோட்டல் சங்கிலியின் அடுக்குமாடி குடியிருப்பில் நிகழ்ந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த நபர், அந்த கட்டடத்தின் நான்காவது மாடியில் இருந்து ஜன்னல் வழியாக வெளியேறி, ஹோட்டல் பெயர் பலகையில் பிடித்துக் கொண்டு தொங்கியதாக கூறப்படுகிறது.

 

வெளியான வீடியோவில், அவர் உள்ளாடைகளை மட்டுமே அணிந்த நிலையில், கட்டடத்தின் வெளிப்புறத்தில் உள்ள அறிவிப்புப் பலகையில் உயிரைப் பணயம் வைத்து தொங்கிக் கொண்டிருப்பது தெளிவாக பதிவாகியுள்ளது. இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் பல்வேறு விதமான விமர்சனங்கள் மற்றும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். சிலர் இதனை நகைச்சுவையாக விமர்சித்துள்ளதுடன், சிலர் இந்த சம்பவம் ஆபத்தானது என்றும், தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தமான விவகாரங்கள் இவ்வாறு வெளிப்படையாக மாறுவது கவலைக்குரியது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அந்த நபருக்கு காயம் ஏற்பட்டதா, அல்லது காவல்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும், இந்த சம்பவம் சீன சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.