பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் முதல் டெஸ்ட் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஜஸ்டின் கிரீவ்ஸ் வரலாற்றுச் சிறப்புமிக்க பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார். டிரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டத்தில், பாகிஸ்தான் அணியின் பேட்டிங் வரிசையைத் தனது அபாரமான பந்துவீச்சால் நிலைகுலையச் செய்து கிரிக்கெட் உலகையே தனது பக்கம் திரும்ப வைத்துள்ளார்.
போட்டியின் முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி 311 ரன்கள் எடுத்த நிலையில், பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் எடுத்து மிகவும் வலுவான நிலையில் இருந்தது. சதமடித்த ஷான் மசூத் களத்தில் இருந்ததால் பாகிஸ்தான் அணி எளிதாகப் பெரிய முன்னிலையைப் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்தச் சமயத்தில் பந்துவீச வந்த ஜஸ்டின் கிரீவ்ஸ், ஆட்டத்தின் போக்கையே தலைகீழாக மாற்றினார்.
முதலில் சதமடித்த ஷான் மசூதை அவுட்டாக்கிய கிரீவ்ஸ், அதனைத் தொடர்ந்து அமீர் ஜமால், அலி உஸ்மான் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோரை அடுத்தடுத்து ரன் ஏதும் கொடுக்காமல் விக்கெட்டுகளைக் கைப்பற்றி வெளியேற்றினார். மதிய உணவு இடைவேளைக்குச் சற்று முன்பும், இடைவேளை முடிந்து வந்த முதல் ஓவரிலும் முகமது அப்பாஸின் விக்கெட்டையும் வீழ்த்தி, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே தொடர்ந்து 5 விக்கெட் மேய்டன் ஓவர்களை வீசிய முதல் பந்துவீச்சாளர் என்ற உலக சாதனையைப் படைத்தார்.
அதாவது, ஒரு ரன் கூட கொடுக்காமல் 5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் 5 விக்கெட் ஹாலைப் (5/27) பதிவு செய்தார். இதற்கு முன் இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் தொடர்ந்து 4 விக்கெட் மேய்டன் ஓவர்களை வீசியதே சாதனையாக இருந்த நிலையில், அதை கிரீவ்ஸ் முறியடித்துள்ளார். இவரது இந்த அசாத்திய பந்துவீச்சால் பாகிஸ்தான் அணி 282 ரன்களுக்குச் சுருண்டது. 149 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை எந்தவொரு பந்துவீச்சாளரும் செய்யாத இந்த சாதனையைச் செய்து கிரிக்கெட் வரலாற்றில் தனது பெயரைப் பொறித்துள்ளார் ஜஸ்டின் கிரீவ்ஸ்.
