மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில், நடுரோட்டில் காதலன் ஒருவர் தனது பெண் தோழியை கொடூரமாகத் தாக்கி, தரதரவென இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை 12-ஆம் தேதி நடைபெற்ற இந்த அதிர்ச்சி சம்பவத்தின் 2 நிமிடம் 22 வினாடிகள் கொண்ட சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

கைலாஷ் விஹார் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த அந்த ஜோடியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் வீதிக்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். தகராறு முற்றவே, கோபமடைந்த அந்தப் பெண் தனது பையுடன் அங்கிருந்து புறப்பட முயன்றார். ஆனால், அவரை வலுக்கட்டாயமாகத் தடுத்த அந்த இளைஞர், பெண்ணின் ஆடையைப் பிடித்து இழுத்துத் தள்ளி கீழே வீழ்த்தி கொடூரமாகத் தாக்கியுள்ளார்.

நடுரோட்டில் அந்தப் பெண் அலறியபடியே தப்பியோட முயன்றபோதும், இளைஞர் விடாமல் துரத்திச் சென்று அவரது சட்டையைக் கிழித்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மற்றும் பாதசாரிகள் சிலர் ஓடிவந்து தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால், “இது எங்கள் தனிப்பட்ட விஷயம், இதில் யாரும் தலையிட வேண்டாம்” என்று இருவருமே பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அங்கிருந்து விரட்டியடித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை பாதிக்கப்பட்ட பெண் தரப்பிலோ அல்லது வேறு நபர்களோ பல்கலைக்கழகக் காவல் நிலையத்தில் எவ்வித எழுத்துப்பூர்வ புகாரும் அளிக்கவில்லை. இருப்பினும், இணையத்தில் வைரலாகும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குவாலியர் காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர். வீடியோவில் உள்ள நபர்களை அடையாளம் கண்டு, உரிய விசாரணைக்கு பின் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போலீஸார் தெரிவித்துள்ளனர்.