உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில், பெற்ற தாயே தனது 3 வயதுக் குழந்தையைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம்  பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. காதலனுடன் செல்போனில் பேசுவதற்கு இடையூறாக இருந்த ஒரே காரணத்திற்காக, ருச்சி குப்தா என்ற பெண் தன் சொந்தக் குழந்தையின் உயிரைப் பறித்த சம்பவம் அப்பகுதி மக்களை உரைய வைத்துள்ளது.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், குற்றஞ்சாட்டப்பட்ட ருச்சி குப்தா நீண்ட நேரமாக தனது காதலனுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. அப்போது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயதுச் சிறுவன், தாயிடம் பேச முயன்றும் கவனத்தை ஈர்க்க முயன்றும் உள்ளான். இதனால் கடுப்பான ருச்சி குப்தா, தன் காதலனுடனான உரையாடலுக்கு இடையூறு ஏற்பட்டதாகக் கூறி பிஞ்சு என்றும் பாராமல் குழந்தையைத் தாக்கியுள்ளார்.

தாயின் தொடர் கொடூரத் தாக்குதலால் குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பெற்ற குழந்தையின் உயிரைப் பறித்த தாய் ருச்சி குப்தாவைக் காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பெற்ற தாயே தன் காதலனுடனான பேச்சுக்காகவும், செல்போன் உரையாடலுக்காகவும் பிஞ்சு குழந்தையின் உயிரைக் குடித்த இந்தச் சம்பவம், மனிதநேயமற்ற செயலின் உச்சமாகப் பார்க்கப்படுகிறது. இச்சம்பவத்தில் தொடர்புடைய காதலன் குறித்தும் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.