உத்தரப் பிரதேச மாநிலம் மாவோ மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில், காதலனைப் போலீஸார் கைது செய்ததைக் கண்டித்து, இளம்பெண் ஒருவர் 120 அடி உயர செல்போன் கோபுரத்தின் உச்சிக்கு ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரத்தன்புரா பகுதியில் உள்ள அதிநவீன செல்போன் கோபுரத்தின் உச்சிக்கு இளம்பெண் ஒருவர் திடீரென கடகடவென ஏறியுள்ளார். சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அவர் ஆபத்தான நிலையில் டவரின் உச்சியில் நிற்பதைக் கண்ட பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். தகவல் காட்டுத்தீ போல் பரவியதை அடுத்து நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு திரண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரத்தன்புரா காவல் துறையினர் கூட்டத்தைக் கட்டுப்படுத்தி, அந்தப் பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விசாரணையில், அவரது காதலனை காவல் துறையினர் கைது செய்த காரணத்தினாலேயே, ஆத்திரமடைந்த அவர் அவரை விடுதலை செய்ய வலியுறுத்தி இந்த ஆபத்தான முடிவை எடுத்தது தெரியவந்தது.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த பதற்றமானப் போராட்டத்திற்குப் பிறகு, அதிகாரிகள் அந்தப் பெண்ணிற்குச் சாதுரியமாக ஆறுதல் கூறி, பத்திரமாகக் கீழே இறக்கினர். அதன்பின்னரே அங்கிருந்த அதிகாரிகளும் பொதுமக்களும் பெருமூச்சு விட்டனர். கைதான காதலன் குறித்த விவரங்கள் மற்றும் இந்த விவகாரத்தின் பின்னணி குறித்து ரத்தன்புரா காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
