மகாராஷ்டிர மாநிலம் சாங்கிலி மாவட்டம் கரோலி (டி) கிராமத்தில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி படுகொலை செய்த சம்பவம் ஒன்பது நாட்களுக்குப் பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இக்கொலைக்கு உடந்தையாக இருந்த மகன்களையும் சேர்த்து நான்கு பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கரோலி கிராமத்தைச் சேர்ந்த பாரத் ஈராப்பா கர்பே (58) என்பவரது மனைவி நிலாபாய் (50). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பாபாஜி கோவிந்த் கர்பே (42) என்பவருக்கும் நீண்ட நாட்களாகக் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இவர்களது உறவுக்கு பாரத் கர்பே இடையூறாக இருந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த நிலாபாய், தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டார். சம்பவத்தன்று பாரத் கர்பேயை தடியால் கடுமையாகத் தாக்கிய இருவரும், பின்னர் அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்தனர். கொலையை மறைக்க, வீட்டின் ஜன்னலில் சொட்டுநீர் பாசனக் குழாயால் பாரத் கர்பேயின் உடலைக் கட்டித் தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை நாடகமாடினர். இந்த விவகாரம் பாரத் கர்பேயின் மகன்களான மனோஜ் மற்றும் அனிகேத் ஆகியோருக்குத் தெரியவந்தது. இருப்பினும், அவர்கள் உண்மையை மறைக்க முடிவு செய்தனர்.

தந்தையின் உடலை மீட்ட மகன்கள், அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்களிடம், தந்தை அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் உயிரிழந்ததாகப் பொய் கூறினர். மருத்துவர்கள் உடற்கூறாய்வு செய்யப் பரிந்துரைத்தும், அதனை ஏற்க மறுத்த மகன்கள், உடலை அவசர அவசரமாகக் கிராமத்திற்குக் கொண்டு சென்று உறவினர்கள் முன்னிலையில் எரியூட்டி இறுதிச் சடங்குகளை முடித்தனர்.

பாரத் கர்பேயின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்து, அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இறுதிச் சடங்குகள் முடிந்து 9 நாட்கள் கழித்து நடத்தப்பட்ட விசாரணையில், மனைவியின் கள்ளக்காதல் விவகாரமும், மகன்களின் ஒத்துழைப்பும் அம்பலமானது. மேலும் தற்போது மனைவி நிலாபாய், கள்ளக்காதலன் பாபாஜி மற்றும் இரு மகன்கள் என நான்கு பேர் மீதும் கொலை மற்றும் தடையங்களை அழித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.