மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில், அரசு சுகாதார மையத்தின் தவறான மருத்துவ அறிக்கையால் ஏழு மாத கர்ப்பிணி ஒருவர் தனது குடும்பத்தை இழந்து நடுத்தெருவிற்கு வந்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் அம்மாநில சுகாதாரத் துறையின் நம்பகத்தன்மை மீது பெரும் கேள்விக்குறியை எழுப்பியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தபோது, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட இரத்தப் பரிசோதனையில் ‘எச்.ஐ.வி பாசிட்டிவ்’ (HIV Positive) இருப்பதாக ஐ.சி.டி.சி (ICTC) மையம் அறிக்கை அளித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தினர், அவர் மீது கடுமையான சந்தேகத்தை எழுப்பினர்.
அதே சமயம், அவரது கணவர் மற்றும் வயிற்றில் இருந்த கரு ஆகியவற்றைப் பரிசோதித்தபோது அவர்களுக்கு பாதிப்பு இல்லை எனத் தெரியவந்தது. சந்தேகமடைந்த அந்தப் பெண், மற்ற தனியார் மருத்துவமனைகளில் மீண்டும் பரிசோதனை செய்தபோது, அவருக்கு எச்.ஐ.வி பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அரசு மையம் வழங்கியது தவறான அறிக்கை என்பது இதன் மூலம் அம்பலமானது.
அரசு மையத்தின் தவறான அறிக்கையால் அந்தப் பெண்ணின் கணவர் மற்றும் புகுந்த வீட்டினர் அவர் மீது அவநம்பிக்கை கொண்டு, அவரை வீட்டிலிருந்து வெளியேற்றினர். சமுதாயத்திலும் அவர் பெரும் அவமானத்தைச் சந்திக்க நேரிட்டது. ஒரு தவறான காகித அறிக்கை, ஒரு பெண்ணின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும், குடும்ப அமைதியையும் சீர்குலைத்துள்ளது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, மாவட்ட நிர்வாகம் மூன்று பேர் கொண்ட உயர்மட்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. சம்பந்தப்பட்ட ஐ.சி.டி.சி மைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் அலட்சியம் குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து டாக்டர் வர்ஷா டோய்போட் கூறுகையில், “இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” எனத் தெரிவித்தார். மேலும் குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
