மகாராஷ்டிர மாநிலம் கோண்ட்பிப்ரி தாலுகாவில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் தனது சொந்த மகளுக்கே பாலியல் வன்கொடுமை இழைத்த தந்தையை போலீஸார் கைது செய்துள்ளனர். பள்ளி ஆசிரியர்களின் சாதுர்யமான நடவடிக்கையால் இந்த கொடூரச் சம்பவம் அம்பலமானது. அதாவது சந்திரப்பூர் மாவட்டம் தோஹோகாவ் பகுதியைச் சேர்ந்த 37 வயது நபர் ஒருவருக்கு மதுப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அவரது மனைவி தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு ராஜூராவில் உள்ள தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
இந்நிலையில், தற்போது பள்ளித் தேர்வுகள் நடைபெறுவதால், தேர்வு எழுத வேண்டும் எனக் கூறி அந்த நபர் தனது மகளை மட்டும் மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது மாணவியை அவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சம்பவத்திற்கு அடுத்த நாள் மாணவி தேர்வு எழுதுவதற்காகப் பள்ளிக்குச் சென்றுள்ளார். அப்போது அவரது பையில் புத்தகங்களுக்குப் பதிலாக உடைகள் இருப்பதைக் கவனித்த ஆசிரியர்களுக்குச் சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து அவரிடம் விசாரித்தபோது, மாணவி கதறி அழுது தனக்கு நேர்ந்த கொடுமையைக் கூறியுள்ளார்.
உடனடியாகச் செயல்பட்ட பள்ளி நிர்வாகம், காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். பள்ளிக்கு விரைந்து வந்த போலீஸார், மாணவியிடம் வாக்குமூலம் பெற்று வழக்குப் பதிவு செய்தனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவ அறிக்கையின் அடிப்படையில், குற்றம் சுமத்தப்பட்ட தந்தையை அவரது வீட்டிலேயே வைத்து போலீஸார் கைது செய்தனர். தற்போது அவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஒரு மாணவியின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்தையும், அவரது பையில் இருந்த உடைகளையும் கவனித்து, மிகச் சரியாக விசாரணை நடத்திய ஆசிரியர்களின் செயலைப் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். மேலும் ஆசிரியர்களின் இந்த விழிப்புணர்வே ஒரு பெரிய குற்றத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வர உதவியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
