உத்தரப் பிரதேச மாநிலம் அசந்த்ரா பகுதியில், பள்ளித் தாளாளரை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி ரூ.14.5 லட்சம் பறித்த ஆசிரியை மற்றும் அவரது காதலனான மாணவரை போலீஸார் கைது செய்துள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்த மிரட்டல் சம்பவம் அரங்கேறியுள்ளது.
அசந்த்ரா பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் தாளாளருக்கும், அதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை ஒருவருக்கும் இடையே தகாத உறவு இருந்துள்ளது. இதற்கிடையில், அந்த ஆசிரியைக்கும் அதே பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இருவரும் இணைந்து பள்ளித் தாளாளரை மிரட்டிப் பணம் பறிக்கத் திட்டமிட்டனர். இதற்காகத் தாளாளரின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அவர்கள் ரகசியமாகச் சேகரித்துள்ளனர்.
வீடியோக்களைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி, கடந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ.14,39,200-ஐ அந்த ஆசிரியை பறித்துள்ளார். கௌரவத்திற்குப் பயந்து தாளாளரும் அந்தத் தொகையை ஆசிரியையின் வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார்.
ஆசை அடங்காத ஆசிரியை மற்றும் அவரது காதலன், கடந்த ஏப்ரல் 8-ம் தேதி மீண்டும் ரூ.2 லட்சம் கேட்டுத் தாளாளரை மிரட்டியுள்ளனர். இதில் ரூ.10 ஆயிரத்தை மட்டும் தாளாளர் கொடுத்துள்ளார். மீதித் தொகையைத் தராததால், வீடியோவை வைரலாக்கிவிடுவோம் என்றும் கொலை செய்துவிடுவோம் என்றும் அவர்கள் மிரட்டியுள்ளனர்.
தாளாளர் தான் கொடுத்த பணத்தைத் திருப்பி கேட்டபோது, அவர் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளிக்கப்போவதாக ஆசிரியை மிரட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தாளாளர், இறுதியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட காவல் ஆய்வாளர் அலோக் மணி திரிபாதி தலைமையிலான போலீஸார், சம்பந்தப்பட்ட ஆசிரியை மற்றும் அவரது மாணவர் காதலனைக் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். பள்ளிக் கல்வித் துறையினரையே அதிர வைத்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
