உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில், பள்ளிக்கூடத்திற்குச் சென்ற ஒன்பதாம் வகுப்பு மாணவி கடத்தப்பட்டு, நான்கு மாதங்களாக 10 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோரக்பூர்  பகுதியைச் சேர்ந்த 14 வயது மாணவி, கடந்த 2025, நவம்பர் 1-ம் தேதி பள்ளிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. மாணவியின் தந்தை குஜராத்தில் கூலி வேலை செய்து வரும் நிலையில், மாணவி தனது சித்தியின் வீட்டில் தங்கிப் படித்து வந்தார். மாணவி காணாமல் போனது குறித்து நவம்பர் 7-ம் தேதி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

காவல்துறையினர் சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் சிக்னலை ஆய்வு செய்து வந்தனர். தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு, மார்ச் 23-ம் தேதி (சுமார் 4 மாதங்களுக்குப் பிறகு) அந்த மாணவியை போலீஸார் மீட்டனர். அவரிடம் நடத்திய விசாரணையில் வெளிவந்த தகவல்கள் காவல்துறையினரையே அதிர வைத்தன.

அதாவது  நவம்பர் 1-ம் தேதி பள்ளிக்குச் சென்றபோது, அறிமுகமான மனிஷ் ராஜ்பார் என்ற ஆட்டோ ஓட்டுநர் மாணவியை ஏமாற்றி கட்டுமானப் பணி நடக்கும் ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்று வன்கொடுமை செய்துள்ளார். தொடர்ந்து அவரது நண்பர்கள் இருவர் அங்கு வந்து மாணவியை சிதைத்துள்ளனர்.

பின்னர் அவர்கள் மாணவியை சாலையில் விட்டுச் சென்றனர். வீட்டிற்குச் செல்ல அஞ்சி ராம்நகர்தால் பகுதியில் அமர்ந்திருந்த மாணவியை, மற்றொரு இளைஞர் ஆசை வார்த்தை கூறி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஒரு மாதம் அடைத்து வைக்கப்பட்டு வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மாணவி, பின்னர் அந்த இளைஞனின் நண்பர்களாலும் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.

மாணவியின் அழைப்பு விபரங்களை ஆய்வு செய்தபோது, அவர் பல்வேறு ஹோட்டல்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு 10 பேரால் சீரழிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதில் வன்கொடுமை உறுதி செய்யப்பட்டது. மாணவி அளித்த தகவலின்படி, ஹோட்டல் உரிமையாளர் தர்மராஜ், ஆட்டோ ஓட்டுநர் மனிஷ் ராஜ்பார், சமீர் மற்றும் கிஷன் ஆகிய நான்கு பேரை போலீஸார் முதற்கட்டமாகக் கைது செய்து சிறையிலடைத்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற 6 பேரிடமும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிக்குச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த இந்தத் துயரம் உத்தரப் பிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கு குறித்த விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது.