இந்தியக் குற்றவியல் சட்டத்தில் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான பிரிவுகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றங்கள் ஏற்படக் காரணமாக இருந்த ‘மதுரா’ பாலியல் வன்கொடுமை வழக்கின் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகளின் உதவிக்கரம் கிடைத்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டம்  கோண்ட் (Gond) பழங்குடியினத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி மதுரா. கடந்த 1972-ம் ஆண்டு மார்ச் 26-ம் தேதி, காவல் நிலையத்தில் வைத்து இரண்டு காவலர்களால் அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த வழக்கில், “சிறுமி கடுமையாக எதிர்க்கவில்லை, எனவே இது சம்மதத்துடன் நடந்த உறவு” என்று கூறி உச்ச நீதிமன்றம் குற்றவாளிகளை விடுவித்தது. இந்தத் தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ஆயிரக்கணக்கான பெண்கள் வீதியில் இறங்கிப் போராடியதன் விளைவாக, 1975-க்குப் பிறகு இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 376-வது பிரிவில் ‘காவல்துறை பாதுகாப்பில் நடக்கும் வன்கொடுமை’ குறித்த சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு, சமூகப் புறக்கணிப்புக்கு அஞ்சி மதுரா தனது அடையாளத்தை முற்றிலுமாக மறைத்துக் கொண்டார். கட்சிரோலியிலிருந்து சந்திரபூர் மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்த அவர், தனது பெயரையும் மாற்றிக்கொண்டார். பல தசாப்தங்களாக வறுமையிலும், நோய் நொடிக் கஷ்டத்திலும் வாழ்ந்து வந்த மதுராவின் நிலை குறித்து ‘பாய்மானுஸ்’ (BaiManus) என்ற இதழ் செய்தி வெளியிட்டது.

மதுராவின் தற்போதைய நிலையை அறிந்த மகாராஷ்டிர சட்ட மேலவை துணைத் தலைவர் டாக்டர் நீலம் கோர்ஹே, அவரை நேரில் சந்தித்து உதவிகளை உறுதி செய்தார். மகாராஷ்டிர அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்யப்பட்டுள்ளது. லாய்ட்ஸ் இன்ஃபினைட் அறக்கட்டளை (LIF) சார்பில் 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. சந்திரபூர் மாவட்ட நிர்வாகம் மூலம் ‘கர்குல்’ திட்டத்தின் கீழ் மதுராவுக்கு புதிய வீடு கட்டப்பட்டு வருகிறது. தற்போது 80 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

மதுராவின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை வழங்கப்பட்டுள்ளது. மதுராவைச் சந்தித்த அனுபவம் குறித்து நீலம் கோர்ஹே கூறுகையில், “அவர் ஒரு தனிநபர் அல்ல, அநீதிக்கு எதிரான போராட்டத்தின் அடையாளம். வறுமை மற்றும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள மதுரா, நான் கிளம்பும்போது ‘மீண்டும் எப்போது வருவீர்கள்?’ என்று கேட்டபோது கண்கள் கலங்கின. இத்தனை ஆண்டுகளாக ஒரு ஆதரவான கரத்திற்காக அவர் காத்திருந்தது அந்த ஒரு கேள்வியில் தெரிந்தது,” என்றார்.

மேலும் 53 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தனி மனுஷியாக சட்டப் போராட்டத்தைத் தொடங்கி, இந்திய சட்டப் புத்தகத்தையே மாற்றிய மதுராவுக்கு, அவரது 72-வது வயதில் கிடைத்துள்ள இந்த அங்கீகாரம் சமூக ஆர்வலர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.