“வறுமையைக் காரணம் காட்டி முடங்கிவிடாமல், லட்சியத்தை நோக்கி ஓடு” என்பதற்கு இலக்கணமாக, போலீஸ் ஆள்சேர்ப்பு முகாமில் நடந்த ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் பலரது இதயங்களை வென்றுள்ளது.

மகாராட்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் தற்போது போலீஸ் ஆள்சேர்ப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அங்குள்ள மைதானத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சீருடை அணியும் கனவோடு ஓடிப் பழகி வருகின்றனர். பெரும்பாலான இளைஞர்கள் விலையுயர்ந்த விளையாட்டு காலணிகளை (Sports Shoes) அணிந்து ஓடிக்கொண்டிருக்க, ஒரு இளைஞன் மட்டும் காலில் சப்பல் அணிந்தபடி ஓடிக்கொண்டிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

அந்தப் பகுதிக்கு ஆய்வு செய்ய வந்த துணை காவல் ஆணையர் (DCP) விக்ரம் சால்வி, அந்த இளைஞனை அழைத்து விசாரித்தார். “ஏன் ஷூ அணியாமல் சப்பல் அணிந்து ஓடுகிறாய்?” என்று அவர் கேட்டபோது, அந்த இளைஞன் அளித்த பதில் அங்கிருந்தவர்களைக் கண் கலங்க வைத்தது. “ஐயா, ஷூ வாங்குவதற்கு எங்களிடம் பணம் இல்லை. குடும்ப சூழ்நிலை மிகவும் மோசமாக உள்ளது. ஆனால் எப்படியாவது சீருடை அணிய வேண்டும் (போலீஸ் ஆக வேண்டும்) என்பது எனது லட்சியம். அதனால் இருக்கும் வசதியை வைத்து ஓடுகிறேன்,” என்று அவர் உறுதியுடன் கூறினார்.

 

இளைஞனின் வறுமையையும், அவரது லட்சிய உறுதியையும் கண்ட டிசிபி விக்ரம் சால்வி உடனடியாகத் தனது பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து, அங்கிருந்தவர்களிடம் கொடுத்து அந்த இளைஞனுக்குப் புதிய காலணி வாங்கி வரச் சொன்னார். சிறிது நேரத்திலேயே புதிய வெண்ணிற ஷூக்கள் வரவழைக்கப்பட்டன. அதனைத் தனது கைகளாலேயே அந்த இளைஞருக்கு டிசிபி அணிவித்து மகிழ்ந்தார்.

இந்த நெகிழ்ச்சியான தருணத்தைச் சிலர் வீடியோ எடுக்க முயன்றபோது, “இது ஒரு சிறிய உதவிதான், இதை வீடியோ எடுக்க வேண்டாம்” என்று டிசிபி விக்ரம் சால்வி மென்மையாக மறுத்துவிட்டார். இருப்பினும், அங்கிருந்தவர்கள் எடுத்த அந்த வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. மேலும் வறுமையைத் தாண்டி லட்சியத்தை நோக்கி ஓடும் அந்த இளைஞனின் விடாமுயற்சியையும், ஒரு அதிகாரியாகத் தனது அதிகாரத்தைக் காட்டாமல் மனிதாபிமானத்தோடு உதவிய டிசிபியின் செயலையும் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.