சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த மீனாட்சி என்ற 28 வயது இளம்பெண் ஒருவர், காதலன் வேறு பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாக அறிந்ததால் மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் அழகு நிலையம் நடத்தி வரும் அந்த இளம்பெண், 5 ஆண்டுகளுக்கு முன்பு வெற்றியூர் அருகே நடைபெற்ற விழாவில் அப்பகுதியை சேர்ந்த பெரியசாமி என்ற சத்யா வாலிபருடன் பழகியுள்ளார். பழக்கம் காதலாக மாறியதையடுத்து, சென்னையில் இருவரும் வாடகை வீட்டில் சேர்ந்து வசித்து வந்துள்ளனர். அந்த வாலிபர், சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், வாலிபருக்கு குடும்பத்தினர் பார்த்த வேறு பெண்ணை திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதையடுத்து, “நான் ஊருக்குச் சென்று பெற்றோரை சமாதானம் செய்து, உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன்” என்று கூறிவிட்டு, அவர் ஊருக்கு சென்றுவிட்டார். ஆனால் அதன் பிறகு அவர் மீண்டும் சென்னைக்கு திரும்பவில்லை.
விராலிமலை பகுதியில் திருமண ஏற்பாடுகள் நடைபெறுகின்றன என்ற தகவல் காதலித்த இளம்பெண்ணுக்கு கிடைத்ததும், அவர் உடனடியாக அங்கு சென்று பெண் வீட்டாரிடம் தனது காதல் குறித்து விளக்கி திருமணத்தை நிறுத்தச் செய்தார்.
அதன் பின்னர் காதலனை சந்திக்க முயன்ற இளம்பெண், “அரசியல் தொடர்புகள் உள்ள ஒருவர் தலையிட்டு, அந்த வாலிபரை ரகசிய இடத்தில் வைத்துள்ளார்” என கூறியுள்ளார். இதனால் மனம் தளர்ந்த அவர், தூக்க மாத்திரைகள் உட்கொண்டு தற்கொலை முயற்சி செய்தார். உடனடியாக அவரை மீட்டு, சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக தேவகோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பினருடனும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவம் விராலிமலை மற்றும் காரைக்குடி பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
