சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் உள்ள பிரபல தனியார் வங்கிக் கிளையில் கடந்த 5-ஆம் தேதி ஒரு பரபரப்புச் சம்பவம் நடந்துள்ளது. பர்தா அணிந்து வந்த பெண் ஒருவர், வங்கி மேலாளரைச் சந்தித்துத் தனது பெயரில் வங்கிக் கணக்கு மற்றும் லாக்கர் தொடங்கக் கோரியுள்ளார்.
ஆனால், அதற்கான ஆவணங்கள் இல்லாததால் அவற்றை எடுத்து வருவதாகக் கூறிச் சென்றுவிட்டார். அப்போது அவர் அமர்ந்திருந்த இருக்கையில், தனது பையைத் தவறவிட்டுச் சென்றார். அந்தப் பையில், 24 காரட் கொண்ட ஒரு கிலோ தங்கக் கட்டி, 22 காரட் கொண்ட 256 கிராம் தங்கச் சங்கிலி மற்றும் ஒரு வளையல் என, மொத்த மதிப்பு சுமார் ரூ.1.50 கோடி இருக்கும் நகைகள் இருந்தது தெரியவந்தது.

ஐந்து நாட்களுக்கு மேலாகியும் அந்தப் பெண் வங்கிக்குத் திரும்பி வராததால், வங்கி நிர்வாகம் வேளச்சேரி போலீசாருக்குத் தகவல் தெரிவித்தது. வேளச்சேரி குற்றப்பிரிவு போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு நடத்திய விசாரணையில், நகையைத் தவறவிட்டுச் சென்றது, அதே வங்கியின் முன்னாள் மேலாளரான பத்மபிரியா (37) என்பது தெரிய வந்தது. வேளச்சேரியில் உள்ள விடுதியில் தங்கி இருந்த அவரிடம் போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில், முன்னாள் மேலாளர் பத்மபிரியா கடன் தொல்லையால் அவதிப்பட்டதும், அவரது கணவர் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. கடன் கொடுத்தவர்களின் நெருக்கடியால், அவர் அந்த வங்கியின் லாக்கரில் இருந்த வெளிநாட்டு வாழ் இந்தியரின் 250 கிராம் நகைகளைத் திருடியதற்காக ஏற்கெனவே மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு, ஒரு வாரத்திற்கு முன் ஜாமீனில் வெளிவந்ததுள்ளார்.
தற்போது மற்றொரு வாடிக்கையாளரின் லாக்கரில் இருந்து திருடிய தங்கக் கட்டி மற்றும் நகைகளை, மீண்டும் கைது செய்யப்படுவோம் என்ற பயத்தில் வங்கி லாக்கரில் வைப்பதற்காகவே அவர் பர்தா அணிந்து வங்கிக்கு வந்துள்ளார் என்பதும், லாக்கரில் வைக்க முடியாததால் நகையை அங்கேயே விட்டுச் சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பத்மபிரியா மீது எந்தப் புகாரும் இல்லாததால், சம்பந்தப்பட்ட லாக்கர் வாடிக்கையாளரிடம் புகார் பெற்று நடவடிக்கை எடுப்பது குறித்து வங்கி அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
