உலகின் மிக உயரமான மனிதர்கள் மற்றும் குட்டையான மனிதர்கள் குறித்த சுவாரசியமான புள்ளிவிவரங்கள் அவ்வப்போது வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில், சமீபத்திய ஆய்வுகளின்படி தென்கிழக்கு ஆசியாவில் உள்ள தீவு நாடான திமோர் லெஸ்டே (Timor-Leste) உலகின் மிகக் குட்டையான மனிதர்கள் வாழும் நாடாக முதலிடத்தில் உள்ளது. இங்குள்ள ஆண்களின் சராசரி உயரம் வெறும் 159.8 சென்டிமீட்டர் (சுமார் 5 அடி 3 அங்குலம்) மற்றும் பெண்களின் சராசரி உயரம் 151.2 சென்டிமீட்டர் (சுமார் 4 அடி 11.5 அங்குலம்) மட்டுமே.

மரபணு காரணங்கள் மட்டுமின்றி, போதிய ஊட்டச்சத்து இல்லாமை மற்றும் அந்தப் பிராந்தியத்தின் வாழ்க்கைச் சூழல் போன்றவை மக்களின் உடல் வளர்ச்சி உலக சராசரியை விடக் குறைவாக இருப்பதற்கு முக்கியக் காரணங்களாக நிபுணர்களால் பார்க்கப்படுகின்றன.

திமோர் லெஸ்டேவைத் தொடர்ந்து லாவோஸ் மற்றும் மடகாஸ்கர் ஆகிய நாடுகளும் மிகக் குறைந்த சராசரி உயரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

லாவோஸில் ஆண்களின் சராசரி உயரம் 160.5 சென்டிமீட்டராக உள்ளது. அதேபோல், உலகிலேயே மிகக் குள்ளமான பெண்கள் வாழும் நாடாக குவாத்தமாலாவ் உள்ளது; இங்குள்ள பெண்களின் சராசரி உயரம் வெறும் 149.4 சென்டிமீட்டர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. பிலிப்பைன்ஸ் நாட்டிலும் ஆண்களின் உயரம் சராசரியாக 163.2 சென்டிமீட்டராகவே உள்ளது.

ஒரு குறிப்பிட்ட பகுதியின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் பொருளாதார வளர்ச்சி, அந்த நாட்டு மக்களின் சராசரி உயரத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது இந்த ஆய்வின் மூலம் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.