பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டம் திலோத்து பகுதியில் திங்கட்கிழமை காலையில் நடந்த ஒரு சம்பவம் இப்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அந்தப் பகுதியில் உள்ள ‘நியூ ஏரியா’ மொஹல்லாவில், ஒரு வாலிபரும் இளம்பெண்ணும் பைக்கில் வந்து இறங்குகின்றனர். தெருவோரத்தில் பைக்கை நிறுத்திவிட்டு இருவரும் வெகுநேரம் பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில், அந்த வாலிபர் அப்பெண்ணின் அருகில் சென்று அவரது நெற்றியில் குங்குமத்தை (சிந்தூர்) இடுகிறார். இந்த மொத்தக் கூத்தும் அங்குள்ள ஒரு வீட்டின் சிசிடிவி கேமராவில் அப்படியே பதிவாகியுள்ளது.

​வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அந்தப் பகுதி மக்கள் மத்தியிலும் சமூக வலைதளங்களிலும் காரசாரமான விவாதங்கள் எழுந்துள்ளன. “பெற்றோர்கள் இவர்களைக் கண்டிப்பதே இல்லையா? பொது இடத்தில் இப்படியொரு அநாகரீகச் செயலா?” என ஒரு தரப்பினர் விளாசினாலும், “இது அவர்களின் தனிப்பட்ட விஷயம், இதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை” என மற்றொரு தரப்பினர் ஆதரவாகப் பேசி வருகின்றனர். அதே சமயம், அந்தப் பெண்ணின் சம்மதத்துடன் தான் இது நடந்ததா அல்லது கட்டாயப்படுத்தப்பட்டாரா? என்ற கோணத்திலும் கேள்விகள் எழுந்துள்ளதால், இப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.