​”பாம்பு என்றால் படையும் நடுங்கும்” என்பார்கள், ஆனால் ஒரு சிலர் ஆபத்தை உணராமல் விஷப் பாம்புகளை வைத்து வித்தை காட்டுகிறேன் எனத் தனது உயிரையே பணயம் வைப்பது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று பார்ப்போரின் நரம்புகளை உறைய வைத்துள்ளது. நபர் ஒருவரின் கழுத்தில் மிகப்பெரிய ராஜநாகம் ஒன்று சுற்றப்பட்டிருக்க, மற்றொரு நபர் அதனை லாவகமாகப் பிடித்து அங்கிருப்பவர்களுக்கு வித்தை காட்ட முயன்றுள்ளார். ஆனால், அந்த வித்தை சில நொடிகளிலேயே விபரீதமாக முடிந்தது.

​யாரும் எதிர்பாராத நேரத்தில், அந்த ராஜநாகம் சீறிப்பாய்ந்து வித்தை காட்ட முயன்ற நபரின் உடலில் பலமாகத் தாக்கியது. அதிக விஷத்தன்மை கொண்ட ராஜநாகம் கடித்த வேகத்தில் அந்த நபர் நிலைகுலைந்து போன காட்சி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சுற்றியிருந்தவர்கள் அலறியடித்து ஓட, அந்த நபரின் நிலைமை தற்போது கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. “வெறும் வேடிக்கைக்காகவும், மற்றவர்களிடம் கெத்து காட்டுவதற்காகவும் இது போன்ற கொடிய விஷப்பாம்புகளைக் கையாள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்” என இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.