ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேல் நோக்கி ஈரான் ஏவிய ஒரு ஏவுகணையில் எழுதப்பட்டிருந்த வாசகம் இப்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்த ஏவுகணையில், “எப்ஸ்டீன் தீவின் பலியானவர்களின் நினைவாக” (In memory of the victims of Epstein Island) என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. உலகையே உலுக்கிய பெரும் செல்வந்தர் ஜெப்ரி எப்ஸ்டீன், தனது ரகசியத் தீவில் பல நாடுகளின் அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கியப் புள்ளிகளுக்குப் பாலியல் விருந்து வைத்ததாக எழுந்த புகாரை மையப்படுத்தியே ஈரான் இந்த வாசகத்தை எழுதியுள்ளது.

இஸ்ரேலைச் சேர்ந்த பல முக்கியப் பிரமுகர்களுக்கும் இந்தத் தீவுக்கும் தொடர்பு இருப்பதாக ஈரான் இதன் மூலம் மறைமுகமாகக் குற்றஞ்சாட்டுவதாகவும், இது ஒரு ‘உளவியல் போர்’ (Psychological Warfare) என்றும் சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். போர்க்களத்தில் வெறும் குண்டுகள் மட்டுமல்லாமல், இத்தகைய சர்ச்சைக்குரிய வாசகங்கள் மூலமும் ஈரான் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.