மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

ஃபாக்ஸ் நியூஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “ஆபரேஷன் எபிக் ஃப்யூரி” (Operation Epic Fury) மூலம் ஏற்கனவே ஈரானின் ஏவுகணைத் திறனில் 50 சதவீதத்தை அமெரிக்கா அழித்துவிட்டதாகக் குறிப்பிட்ட டிரம்ப், பேச்சுவார்த்தைக்குத் தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இருப்பினும், ஈரான் தனது போக்கைக் கைவிட்டுப் பின்வாங்கவில்லை என்றால், அந்த நாடு இதுவரை சந்தித்திராத வகையில் 20 மடங்கு கடுமையான தாக்குதலை அமெரிக்கா நடத்தும் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். ஈரானின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மொஜ்தபா கமேனி குறித்துத் தனது அதிருப்தியை வெளிப்படுத்திய அவர், ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் விநியோகத்தைத் தடுக்க ஈரான் முயன்றால் அதன் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்று எச்சரித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் ஈரான் தரப்பும் சளைக்காமல் பதிலடி கொடுத்துள்ளது. டிரம்பின் கருத்துக்குப் பதிலளித்துள்ள ஈரானின் ஐஆர்ஜிசி செய்தித் தொடர்பாளர் அலி முகமது நானி, “போர் எப்போது முடிவடையும் என்பதை இனி ஈரான் தான் தீர்மானிக்கும்” என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், உலகளாவிய எண்ணெய் சந்தையில் ஏற்படும் பாதிப்புகளைச் சீர்செய்ய ரஷ்ய அதிபர் புடினுடன் டிரம்ப் நீண்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சில கெட்டவர்களை அகற்றுவதற்காகவே மத்திய கிழக்கிற்குத் தான் சிறிய பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், துணிச்சலான ஜனாதிபதியால் மட்டுமே இத்தகைய அதிரடி முடிவுகளை எடுக்க முடியும் என்றும் டிரம்ப் பெருமையாகக் குறிப்பிட்டுள்ளார்.

போர் 11-வது நாளை எட்டியுள்ள சூழலில், இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் இந்த வார்த்தைப் போர் உலக நாடுகளைப் பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.