புளோரிடா மாகாணம் ஓவீடோ பகுதியில், 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் 41 வயதான ஆசிரியர் டேனியல் பிலிப் லீ லீவ்ரே கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயுடன் பழகி வந்த இவர், கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் முதல் அந்தச் சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

ஜனவரி 2024-இல் அந்தத் தாயுடனான உறவை முறித்துக் கொண்டபோது, அந்தச் சிறுமியை நெருங்குவதற்காகவே தான் அவரோடு பழகியதாக அந்த ஆசிரியர் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. தனது ஆசிரியர் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி, நம்பிக்கைக்குரியவர் போல நடித்து இந்தத் துரோகத்தைச் செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணையில், யாரிடமும் சிக்காமல் இருக்க அந்த ஆசிரியர் மிகவும் திட்டமிட்டுச் செயல்பட்டது தெரியவந்துள்ளது. சிறுமியுடன் ரகசியமாகப் பேச ‘மோர்ஸ் கோட்’ முறையை அவர் பயன்படுத்தியுள்ளார்.

மேலும், ரகசிய மின்னஞ்சல் கணக்குகள், ஒரு தனி வங்கி கணக்கு மற்றும் ரகசிய அலைபேசி இணைப்பை அந்தச் சிறுமிக்காக அவர் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். தனது வகுப்பறை மேஜையிலேயே அந்தச் சிறுமிக்காக போர்வை உள்ளிட்ட பொருட்களை ரகசியமாக வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

“>

 

தற்போது அவர் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.