ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள கர்தானி பகுதியில், பிளாஸ்டிக் சாக்கு மூட்டைக்குள் பாதி எரிந்த நிலையில் கிடந்த ஆண் சடலம் குறித்து போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில், மனைவியே தனது கணவனைக் கொன்று எரித்தது அம்பலமாகியுள்ளது.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஷேக் சாகன் (35) என்பவர், மதுபோதையில் அடிக்கடி தனது மனைவி மௌசுமி மற்றும் குழந்தைகளை அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளார். கணவனின் கொடுமை எல்லை மீறியதால் ஆத்திரமடைந்த மௌசுமி, கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி இரவு தூங்கிக் கொண்டிருந்த ஷேக் சாகனின் தலையில் சுத்தியலால் அடித்து, கயிற்றால் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
பின்னர், தனது மைனர் மகனின் உதவியுடன் சடலத்தை ஒரு சாக்கு மூட்டையில் கட்டி, அதிகாலை 3 மணியளவில் சைக்கிள் ரிக்ஷாவில் எடுத்துச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வீசி, அடையாளம் தெரியாமல் இருக்கப் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்.
இந்தக் கொடூரச் செயலைச் செய்த பிறகு ஒன்றும் தெரியாதது போல் மௌசுமி நாடகமாடிய நிலையில், அப்பகுதியில் இருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளைப் போலீசார் ஆய்வு செய்தபோது உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.
ரிக்ஷாவில் மர்ம மூட்டையுடன் தாயும் மகனும் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்ததை அடுத்து, போலீசார் மௌசுமியைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தனது கணவனின் சித்திரவதை தாங்க முடியாமல் இந்தக் கொலையைச் செய்ததாக அவர் கண்ணீருடன் ஒப்புக்கொண்டார்.
12 மணி நேரத்திற்குள் இந்தக் கொலை வழக்கைத் துப்புலக்கிய போலீசார், மௌசுமியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்; அவரது மைனர் மகன் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். கணவனைக் கொன்று குப்பை வண்டியில் எடுத்துச் சென்று எரித்த இந்தச் சம்பவம் ஜெய்ப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
