அமெரிக்க-ஈரான் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையில் இன்னும் பதற்றம் தணியவில்லை. காகித அளவிலான ஒப்பந்தங்களில் விலை குறைந்து காணப்பட்டாலும், நிஜமான சந்தையில் எண்ணெய்க்கான தட்டுப்பாடு விண்ணைத் தொடுகிறது.

ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயை உடனடி விநியோகத்திற்குப் பெற வர்த்தகர்கள் 140 டாலருக்கும் மேல் அதிக விலை கொடுக்கத் தயாராக உள்ளனர். ஹார்முஸ் ஜலசந்தி வழியாக விநியோகம் சீராகாததால் ஏற்பட்ட 40 நாள் இடைவெளி, தற்போது உலக நாடுகளைக் கடுமையாகப் பாதித்து வருகிறது.

இந்த நெருக்கடியைச் சமாளிக்க இந்தியா வெனிசுலாவிலிருந்தும், சீனா கனடாவிலிருந்தும் எண்ணெயைக் கொள்முதல் செய்யத் தொடங்கியுள்ளன. கச்சா எண்ணெய் பற்றாக்குறையால் ஐரோப்பிய சுத்திகரிப்பு ஆலைகள் தங்கள் உற்பத்தியைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன; இது டீசல் மற்றும் விமான எரிபொருள் விலையை மேலும் உயர்த்தக்கூடும்.

அமெரிக்காவிலேயே பெட்ரோல் கையிருப்பு கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்துள்ளதால், வரும் நாட்களில் உலகெங்கிலும் எரிசக்திப் பாதுகாப்பு என்பது பெரும் சவாலாக மாறும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.