இங்கிலாந்தின் நார்தம்பர்லேண்ட் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு சிறிய கல், இப்போது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. பார்ப்பதற்கு அப்படியே ஒரு மனிதன் சிரிப்பது போல, வரிசையாக பற்களுடன் காட்சியளிக்கும் இந்த விசித்திர கல்லை, ஹோலி தீவு கடற்கரையில் உலா வந்த 64 வயதான கிறிஸ்டின் கிளார்க் என்பவர் கண்டெடுத்துள்ளார்.

“மணலில் கிடந்த இந்த கல், ஏதோ பொய் பற்கள் செட் போல இருந்தது, என்னை பார்த்து அது சிரிப்பது போலவே தெரிந்தது” என அவர் வியப்புடன் தெரிவித்துள்ளார்.

இதனை சமூக வலைதளங்களில் அவர் பதிவிட, அது காட்டுத்தீயாக பரவிய நிலையில், பிரிட்டிஷ் புவியியல் ஆய்வு மைய (BGS) நிபுணர்கள் இதன் ரகசியத்தை உடைத்துள்ளனர்.

உண்மையில் இது சாதாரண கல் அல்ல; சுமார் 35 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலில் வாழ்ந்த ‘கிரினாய்டு’ (Crinoid) என்ற ஒரு வகை கடல் உயிரினத்தின் படிமம் (Fossil) ஆகும்.

கடல் அல்லி (Sea Lilies) என்று அழைக்கப்படும் இந்த உயிரினத்தின் தண்டு பகுதி, பல மில்லியன் ஆண்டுகளில் சிதைந்து, மடிந்து போனதால் இது பார்ப்பதற்கு மனிதனின் சிரிக்கும் வாய் போன்ற வடிவத்தை பெற்றுள்ளது.

சுமார் 50 கோடி ஆண்டுகள் பழமையான வரலாற்றைக் கொண்ட இந்த உயிரினம், பூமியின் மிகத் தொன்மையான விலங்குகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

உள்ளூர் மக்கள் இதனை ‘கடவுளின் மணிகள்’ என்று புனிதமாக கருதும் நிலையில், இந்த ‘சிரிக்கும் படிமம்’ அறிவியலாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.