குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்துவரும் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த நரேந்திர கமல்சிங் (25) மற்றும் அதே தொழிற்சாலையில் பணியாற்றிய புஷ்பதேவி (20) ஆகியோருக்கு இடையில் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து, கடந்த மூன்று மாதங்களாக லிவ்-இன் உறவில் ஒரே வீட்டில் தங்கி வந்தனர்.

இந்நிலையில், கடந்த 29ஆம் தேதி இரவு இவர்களுக்கு இடையே கடுமையான தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் தீவிரமான நிலையில் ஆத்திரமடைந்த கமல்சிங், வீட்டில் இருந்த மரக்கட்டையால் புஷ்பதேவியை தாக்கியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடுமையாக காயமடைந்த புஷ்பதேவியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், அந்த தினமே அவர் உயிரிழந்தார். சம்பவ தகவல் அறிந்த போலீசார், கொலை குற்றச்சாட்டில் கமல்சிங்கை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்த கமல்சிங் இன்று திடீரென மயங்கி விழுந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. சிறைத்துறை அதிகாரிகள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மேலும் லிவ்-இன் உறவில் இருந்த இளம்பெண்ணை அடித்து கொன்ற இளைஞர் சிறையில் திடீர் மரணம் அடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.