நாடு முழுவதும் 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிச்சுமை மற்றும் மேலதிகாரிகளின் அழுத்தம் காரணமாக பல பகுதிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) தற்கொலை செய்யும் நிகழ்வுகள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன.

அந்தவகையில் உத்தரப் பிரதேசத்தின் மொராதாபாத் மாவட்டத்தில் உதவி ஆசிரியரும், பிஎல்ஓவாக நியமிக்கப்பட்டிருந்த சர்வேஷ் சிங் (46), தேர்தல் பணிச்சுமையை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அவர் பிஎல்ஓவாக நியமிக்கப்பட்டிருந்தார். இது அவரது முதல் தேர்தல் தொடர்பான பொறுப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தற்கொலைக்கு முன்பு பதிவு செய்த வீடியோவில், “எவ்வளவு முயன்றாலும் என் வேலையை முடிக்க முடியவில்லை. கடந்த 20 நாட்களாக நன்றாகத் தூங்கவில்லை. மற்றவர்கள் பணியை முடித்து வருகின்றனர். நான் மன அழுத்தத்தில் இருக்கிறேன். அம்மா, சகோதரி மன்னித்துவிடுங்கள். என் மகள்களை கவனித்துக்கொள்ளுங்கள். நான் தேர்தல் பணியில் தோற்றுவிட்டேன்,” என அவர் கண்ணீருடன் கூறியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இதைக் கண்ட அவரது மனைவி பாப்லி தேவி அதிர்ச்சி அடைந்தார். தகவல் பெறப்பட்டதும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், இரண்டு பக்க தற்கொலைக் குறிப்பு போலீசாரால் கைப்பற்றப்பட்டது.

இதற்கிடையில், நாடு முழுவதும் இதுவரை 29 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் உயிரிழந்துள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். BLOக்கள் மரணத்திற்கு “பாஜக ஆட்சி மற்றும் தேர்தல் ஆணையத்தின் பணிச்சுமை, அழுத்தமே காரணம்” என அவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தேர்தல் திருத்தப் பணியின் நிலைமை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.