பெங்களூரு பாண்டுரங்க நகர் பகுதியில் 22 வயது இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் ஹாசனை சேர்ந்த அச்சல். இவர் கன்னட நடிகை ஆஷிகா ரங்கநாதின் தாய்மாமாவின் மகள் ஆவார். இன்ஜினீயரிங் படிப்பை முடித்த அவர், வேலைக்காக பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி வந்தார்.
அச்சல், தூரத்து உறவினர் மயங்க் என்பவருடன் காதல் உறவில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மயங்க் போதைப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததுடன், திருமணத்திற்கு முன்பே உல்லாசத்துக்காக அழைத்து அச்சலுக்கு உடல் மற்றும் மனரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மயங்கின் பாலியல் அத்துமீறல்கள் அதிகரித்ததால் அச்சல் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதையடுத்து மயங்குடன் தொடர்பை நிறுத்த முயன்றபோதும், அவர் தொடர்ந்து செல்போனில் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், மயங்கிற்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது அச்சலுக்கு தெரிய வந்ததும், அவர் மேலும் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்த மன அழுத்தத்தால், “தற்கொலை செய்துகொள்கிறேன்” என்று குறுந்தகவல் அனுப்பி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக்கொண்டார். வெளியே சென்றிருந்த உறவினர்கள் வீடு திரும்பியபோது அச்சல் தூக்கில் தொங்கியிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அச்சலின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
இதற்கிடையில், அச்சலின் பெற்றோர் தங்கள் மகளின் மரணத்துக்கு மயங்க் மற்றும் அவரது தாய் மைனாவே காரணம் என போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் இருவர்மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த துயரச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
