மேற்கு வங்க மாநிலத்தில் அழகு நிலையம் நடத்தி வந்த 50 வயது பெண் ரூபானி தாஸ், ஹரியானாவைச் சேர்ந்த பங்கஜ் என்பவரால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். ரூபானி தாஸுக்கும் பங்கஜுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகத் தொடர்பு இருந்துள்ளது. இதற்காக ரூபானி தாஸ் ஹரியானாவிற்குச் சென்று பங்கஜுடன் மூன்று மாதங்கள் தங்கியிருந்து விட்டு, பின்னர் மீண்டும் கொல்கத்தா திரும்பியுள்ளார்.
ஊர் திரும்பிய பிறகு அவர் பங்கஜுடன் பேசுவதையும் பழகுவதையும் முற்றிலுமாகத் தவிர்த்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பங்கஜ், நேற்று மதியம் ரூபானி தாஸின் அழகு நிலையத்திற்கு நேரில் சென்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் ரூபானியை சரமாரியாகக் குத்திக் கொலை செய்த பங்கஜ், தானும் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.
அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியினர் ஓடி வந்து பார்த்தபோது இருவரும் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தனர். தகவலறிந்து வந்த நரேந்திரபூர் போலீசார் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், இந்தத் துயரச் சம்பவம் குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
