பாம்பு என்றாலே படையும் நடுங்கும் என்பது பழமொழி. பாம்பின் விஷம் மனித உடலில் ஏறிவிட்டால், சில நொடிகளில் மரணம் சம்பவிக்கும் அபாயம் இருப்பதால், உலகிலேயே அதிகம் அஞ்சப்படும் உயிரினமாகப் பாம்புகள் உள்ளன. குறிப்பாக, கோப்ரா (நாகப்பாம்பு) வகைகளைக் கண்டால் மனிதர்களுக்குக் கிலி பிடிக்கும். ஆனால், இயற்கையின் விசித்திரப் படைப்பில் இந்த விஷப் பாம்புகளையே வேட்டையாடும் சில ‘எமதர்மன்கள்’ உலவி வருகின்றன. அவை எவை என்று பார்ப்போம்:

1. கீரிப்பிள்ளை (Mongoose): பாம்புகளின் பரம எதிரி கீரிப்பிள்ளை தான். பாம்புகளுக்கு உண்மையான எமனாக விளங்கும் கீரிப்பிள்ளையின் ரத்த நாளங்களில், பாம்பின் விஷத்தை முறியடிக்கும் எதிர்ப்புச் சக்தி இயற்கையிலேயே உள்ளது. மின்னல் வேகத்தில் தாக்கும் திறன் கொண்ட கீரிப்பிள்ளை, நாகப்பாம்புடன் போராடி அதன் உயிரைப் பறிப்பதில் வல்லது.

2. ராஜநாகம் (King Cobra): பாம்பினங்களிலேயே ராஜநாகம் ஒரு தனி ரகம். இதற்கு ‘பாம்புகளை உண்ணும் பாம்பு’ என்ற பெயரும் உண்டு. மற்ற விஷப் பாம்புகளை வேட்டையாடி உண்பதில் ராஜநாகம் முதன்மையானது. இதன் தாக்குதலில் இருந்து மற்ற பாம்புகள் தப்பிப்பது கடினம்.

3. ஹனி பேட்ஜர் (Honey Badger): பாம்புகளுக்கு மற்றொரு சிம்மசொப்பனம் ஹனி பேட்ஜர். உலகின் தைரியமான விலங்காகக் கருதப்படும் இது, எவ்வளவு பெரிய விஷப்பாம்பு கடித்தாலும் இறப்பதில்லை. இதன் தடித்த தோல் மற்றும் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலம், பாம்பின் விஷத்தைத் தானாகவே முறியடித்துவிடும்.

4. கருடன் (Eagle): வானில் இருந்து மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்து பாம்புகளை வேட்டையாடுவதில் கருடன் கில்லாடி. தனது கூர்மையான நகங்களால் பாம்பின் தலையைப் பற்றி, தப்பிக்க ஒரு சிறு வாய்ப்பைக் கூட கொடுக்காமல் அதைக் கொன்றுவிடும்.

மேலும் இயற்கையின் சமநிலையைப் பேண, ஒரு பக்கம் கொடிய விஷம் கொண்ட பாம்புகள் இருந்தாலும், அவற்றை அடக்க இத்தகைய வலிமையான உயிரினங்களையும் இயற்கை உருவாக்கி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.