உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள பாங்கர் கிராமத்தில் கள்ளக்காதல் விவகாரத்தால் நிகழ்ந்த ஒரு பழிவாங்கல் கொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்ஷய் என்ற இளைஞருக்கும், மனோஜ் என்பவரின் மனைவிக்கும் இடையே இருந்த கள்ளத்தொடர்பு வெளியே தெரிந்ததால், மனோஜின் குடும்பத்தில் பெரும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மனவேதனையடைந்த மனோஜின் மனைவி 6 மாதங்களுக்கு முன்பே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தனது மனைவியின் மரணத்திற்கும், ஊருக்குள் தனது குடும்ப மானம் போனதற்கும் அக்ஷய்தான் காரணம் என ஆத்திரத்தில் இருந்த மனோஜ், தனது மகனுடன் சேர்ந்து அவனைக் கொல்லத் திட்டம் தீட்டினார்.

இதற்கிடையே ஊரை விட்டு ஓடியிருந்த அக்ஷய், சமீபத்தில் மீண்டும் கிராமத்திற்கு வந்ததை அறிந்த மனோஜ், அவரை வழியை மறித்துத் தனது மகனுடன் சேர்ந்து பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளார்.

அக்ஷய் உயிருக்குப் போராடிய நிலையில், துப்பாக்கியால் சுட்டு அவரைத் தீர்த்துக்கட்டியுள்ளனர். இந்த ‘பிளைண்ட் மர்டர்’ வழக்கை லாவகமாகத் துப்புதுலக்கிய போலீஸார், தந்தை மற்றும் அவரது மைனர் மகனை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.