மக்களவையில் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து சபையை வழிநடத்திக் கொண்டிருந்தவர், கேள்வி நேரத்தில் பங்கேற்று கேள்வி எழுப்பிய ஒரு அபூர்வ நிகழ்வு இன்று அரங்கேறியுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வரும் நிலையில், சபாநாயகர் ஓம் பிர்லா அவையில் இல்லாதபோது, தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. கிருஷ்ண பிரசாத் தென்னெட்டி சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து சபையை நடத்தினார்.

மேலும் பொதுவாகச் சபாநாயகர் இருக்கையில் இருப்பவர்கள் அவையை மட்டுமே வழிநடத்துவார்கள்; விவாதங்களிலோ அல்லது கேள்வி நேரத்திலோ நேரடியாகப் பங்கேற்பது வழக்கம் இல்லை என்பதால், இந்த நிகழ்வு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதனால் கேள்வி நேரத்தின்போது, அவையின் அனுமதியுடன் தான் ஒரு கேள்வி எழுப்ப விரும்புவதாகக் கூறிய கிருஷ்ண பிரசாத், கடற்பகுதிகள் மற்றும் கடற்கரையோரங்களில் கண்டெடுக்கப்படும் அரிய வகை தாதுப்பொருட்கள் குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் தாதுப்பொருட்களை எடுக்கும்போது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும், வளங்களைச் சரியாகப் பயன்படுத்துவதற்கும் இடையே உள்ள சமநிலையை அரசு எவ்வாறு கையாள்கிறது என்று அவர் வினவினார். சபாநாயகர் நாற்காலியில் அமர்ந்து கொண்டு கேள்வி எழுப்பிய இந்த அரிய தருணம், நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு சுவாரசியமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.